2015-12-14 16:16:00

கடுகு சிறுத்தாலும்–கடவுளின் கருணை எல்லையற்றது


அருணாச்சலம் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர். வாழ்க்கையில் எது நடந்தாலும் எல்லாம் கடவுள் செயல் என்று சொல்வார். ஆனால் அதே ஊரில் வாழ்ந்து வந்த தங்கையா அவருக்கு நேர் எதிர். அருணாச்சலம் ஏழை என்பதால், அருணாசலத்தை பார்க்கும் போதெல்லாம் மிகவும் கிண்டல் செய்வார் தங்கையா. ஒரு நாள் கன மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக குடை பிடித்துக்கொண்டு வந்து கொண்டிருந்தார் தங்கையா. குடை வாங்க வசதியில்லாத அருணாச்சலம் மழையில் நனைந்தபடி வந்து கொண்டிருந்தார். "என்ன அருணாச்சலம் இப்படி மழையில எங்க போயிட்டு வர்ற? எல்லாம் கடவுள் செயல் என்று சொல்லும் உனக்கு ஒரு குடை கொடுக்க வேண்டும் என்று அந்தக் கடவுளுக்குத் தெரியாதா, என்னய்யா சாமி?'' என்று கிண்டல் செய்தார். "அந்தக் கடவுளின் கருணை இல்லையென்றால் உம் கையில் குடை இருந்தாலும் நீ அதை பிடித்துச் செல்ல முடியாது. அதை கையில் வைத்து கொண்டு ஓடுவீர் என்பதை மட்டும் மறந்துவிடாதீர். இறைவனது கருணையை எப்போதும் கிண்டல் செய்யாதீர்'' என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தார் அருணாச்சலம். பெரிய தத்துவம் சொல்றான் என்று சிரித்து கொண்டே நடந்தார் தங்கையா. சிறிது தூரம்கூட நடந்திருக்கமாட்டார் அதற்குள் அவ்வழியில் காட்டாற்று வெள்ளம் திடீரென பொங்கி வந்தது. உயிர் பயத்தில் ஓட்டம் பிடித்தார் தங்கையா. வெள்ளம் பிறீட்டுத் துரத்தியது. குடையைப் பிடித்து கொண்டு ஓடுவதற்குச் சிரமமாக இருந்தது. எனவே, குடையை மடக்கி வீசிவிட்டு ஓட்டமாக ஓடி உயிர் தப்பிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. அப்பொழுதுதான் அவர் மனதில் அருணாச்சலம் சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. கடவுளின் கருணை இல்லாவிட்டால் கையில் குடை இருந்தாலும் பிடிக்க முடியாது என்பதை உணர்ந்தார். அவரை அறியாமல் ஒருவித பயம் அவரை ஆட்கொண்டது. அன்றிலிருந்து கடவுளின் கருணையை நம்ப ஆரம்பித்தார் தங்கையா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.