2015-12-14 16:26:00

இறைவனின் இரக்கத்தில் நம்பிக்கை வைப்பது எத்துணை அழகானது


டிச.14,2015. திருஅவையில் ஒவ்வொரு மனிதரின் சுதந்திரமும், மனத்தாராளமும், நம்பிக்கையும் எத்துணை அழகானது என்று, இத்திங்களன்று சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அதேநேரம், திருஅவையில் கண்டிப்பாக இருப்பவர் அழகற்றவராக இருக்கிறார், இறுகிய உள்ளம் கொண்ட குருக்கள் தங்கள் இதயங்களை மூடிக்கொண்டிருப்பது தீமையானது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஸ்ராயேலை பழிப்பதற்காக அரசரால் வாடகைக்கு வாங்கப்பட்ட இறைவாக்கினர் பிலயாம் பற்றிக் கூறும் இந்நாளைய திருப்பலியின் முதல் வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, இரக்கத்தின் ஆண்டில், இரு வழிகள் உள்ளன, ஒன்று, எல்லாவற்றையும் மன்னிக்கும் இறைவனின் இரக்கத்தில் நம்பிக்கை வைப்பது, இன்னொன்று, இதயங்களை மூடிக்கொள்ளும் குருக்களின் இறுக்கநிலை என்று தெரிவித்தார்.

பிலயாம் தனது தவறுகளை, ஏன், பாவங்களையும்கூடக் கொண்டிருந்தார், நாமும் பாவங்களைக் கொண்டிருக்கிறோம், நாமும் பாவிகள், இதைக் குறித்து திகிலடையத் தேவையில்லை, கடவுள் நம் பாவங்களைவிட மேலானவர், பிலயாம் தனது பயணத்தில் வானதூதரைச் சந்திக்கிறார், வானதூதர் பிலயாமின் இதயத்தை மாற்றுகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்நாளைய நற்செய்தியிலும், தலைமைக் குருக்கள் இயேசுவிடம், நீர் எந்த அதிகாரத்தால் செயல்படுகின்றீர் என்று கேட்டனர், இந்த மனிதர்கள், தங்களின் கண்டிப்பான சட்டதிட்டங்களுக்கு அடிமையானவர்கள், தங்களின் கணிப்புக்களுக்குள் பூட்டப்பட்டவர்கள் என்றுரைத்த திருத்தந்தை, அவர்கள் கொண்டிருந்த மனிதக் கணிப்புகள் அவர்களின் இதயங்களையும், சுதந்திரத்தையும் அடைத்துவிட்டன என்று கூறினார். நம்பிக்கை, கிறிஸ்தவப் புண்ணியமாகும், அது இறைவனிடமிருந்து பெறும் பெரிய கொடையாகும், அது, நம் பிரச்சனைகள், வேதனைகள் மற்றும் இன்னல்களைக் கடந்து நம்மை நோக்க வைக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், “மிக அதிகத் தேவையில் இருப்போர்க்கு கிறிஸ்துவின் கனிவை வழங்குவதற்கு ஒரு நாளைக்கு ஒரு திட்டம்” என்பது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இத்திங்களன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.