2015-12-12 16:07:00

காலநிலை உயர்வை 2Cக்குள் வைப்பதற்கு இறுதித்தொகுப்பு பரிந்துரை


டிச.12,2015. பாரிசில் கடந்த இரு வாரங்களாக நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த உலக உச்சி மாநாட்டில் இச்சனிக்கிழமையன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள இறுதி வரைவுத் தொகுப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது வரலாற்றில் ஒரு திருப்பமாக அமையும் என்று ப்ரெஞ்ச் வெளியுறவு அமைச்சர் Laurent Fabius அவர்கள் தெரிவித்துள்ளார்.

இம்மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இருபது பக்கங்கள் கொண்ட இறுதி வரைவுத் தொகுப்புப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய, காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா. உலக மாநாட்டை நடத்தும் பிரான்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர் Fabius அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

இறுதி வரைவுத் தொகுப்பு நியாயமானதாகவும், சட்டப்படி செயல்பட வைப்பதாகவும், இப்பூமியின் வெப்பநிலை உயர்வை 2 செல்சியுசுக்குள் கட்டுப்படுத்துவதாகவும் உள்ளது என்று Fabius அவர்கள் கூறினார்.

ஏறக்குறைய 200 நாடுகள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் கொண்டுவரப்படும் ஒப்பந்தம், 2020ம் ஆண்டில் அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. 

இவ்வெள்ளியன்று நிறைவடைவதாய் இருந்த இந்த உலக மாநாடு  இச்சனிக்கிழமையன்றும் நீடித்தது.

இதற்கிடையே, இவ்வெள்ளி மாலையில் வெளியிடப்பட்ட வரைவுத் தொகுப்பைப் பார்த்த 17 கத்தோலிக்க வளரச்சித்திட்ட நிறுவனங்கள்(CIDSE), இம்மாநாடு நிறைவடைவதற்கு முன்பாக, சில முக்கிய விவகாரங்கள் இடம்பெற வேண்டியுள்ளன என்று கூறின.

ஆதாரம் : BBC /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.