2015-12-12 16:01:00

இலங்கையில் இரண்டு இலட்சம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன


டிச.12,2015. இலங்கையில் இதுவரை இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன என்று, நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் மிகப் பெரிய அரசு-சாரா அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கையின் வடக்கில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை 2020ம் ஆண்டுக்குள் முழுவதுமாக அகற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும், இப்பணியில் 500க்கு மேற்பட்ட இலங்கை ஆண்களும் பெண்களும் ஈடுபட்டுள்ளனர் எனவும் HALO Trust அரசு-சாரா அமைப்பின் Damian O'Brien அவர்கள் தெரிவித்துள்ளார்.

மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள 90 விழுக்காட்டு இடங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், காட்டுப் பகுதிகள் மற்றும் வயல் பகுதிகளில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் தனது அமைப்பு தற்போது ஈடுபட்டுள்ளது எனவும் O'Brien அவர்கள் கூறியுள்ளார்.

கண்ணி வெடிகளுக்கு எதிரான அனைத்துலக ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திடவில்லை எனினும், அது HALO Trustன் பணிகளுக்குத் தடையாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள HALO Trust அமைப்புக்கு பிரிட்டன், ஜப்பான், மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் நிதியுதவி வழங்கி வருகின்றன.

இதற்கிடையே, நிதியுதவிகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக சில அரசு-சார்பற்ற நிறுவனங்கள் கண்ணிவெடி அகற்றும் பணிகளை நிறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : தமிழ்வின்/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.