2015-12-12 14:52:00

திருவருகைக்காலம் 3ம்ஞாயிறு (மகிழும் ஞாயிறு) - ஞாயிறு சிந்தனை


டிசம்பர் 8, அமல அன்னை பெருவிழாவன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் புனிதக் கதவைத் திறந்து, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டினைத் துவக்கிவைத்தார். டிசம்பர் 13, இஞ்ஞாயிறன்று, அனைத்துலக கத்தோலிக்க மறைமாவட்டங்களின் பேராலயங்களிலும், திருத்தலங்களிலும் உள்ள புனிதக் கதவுகள் திறக்கப்படுகின்றன. துவங்கியிருக்கும் இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டைக் குறித்து இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள இந்த ஞாயிறு சிந்தனையில் - வழிபாட்டில் –  முயல்வோம்.

இரண்டாம் வத்திக்கான் சங்கம், 1965ம் ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி நிறைவுற்றது. அதன் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டினை திருத்தந்தை அறிவித்தார். இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கும், இரக்கத்திற்கும் என்ன தொடர்பு என்ற கேள்விக்குப் பதில் தருவதுபோல், யூபிலி ஆண்டின் துவக்கத் திருப்பலியில் திருத்தந்தை தன் மறையுரையில் பின்வரும் கருத்தைப் பகிர்ந்துகொண்டார்:

இன்று நாம் புனிதக் கதவைக் கடந்து செல்லும்போது, மற்றொரு கதவையும் நினைவுகூருவோம். இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் கலந்துகொண்ட தந்தையர், 50 ஆண்டுகளுக்கு முன், இவ்வுலகிற்குத் திறந்துவைத்த அக்கதவை நினைவில் கொள்வோம். இச்சங்கம், அனைத்திற்கும் மேலாக, ஒரு சந்திப்பின் சங்கமாக அமைந்தது. பல ஆண்டுகளாக தனக்குள்ளேயே வாழ்ந்துவந்த திருஅவை, தூய ஆவியாரின் தூண்டுதலால், வெளியேறி வந்து, மக்களுடன் மேற்கொண்ட சந்திப்பு அது. மக்களை, அவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் சந்திக்க திருஅவை வந்தது.

'இரக்கத்தின் முகம்' என்ற பெயரில் இந்த யூபிலி ஆண்டைக் குறித்து வெளியிட்டிருந்த அதிகாரப்பூரவமான ஆவணத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கும், இரக்கத்திற்கும் உள்ள தொடர்பை, இன்னும் ஆழமாக விளக்கியிருந்தார். திருத்தந்தை வழங்கிய விளக்கம் இதோ:

இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் வழியாக, திருஅவை, தன் வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்தது. இறைவன், மனிதர்களுக்கு நெருக்கமானவர் என்ற பாணியில் பேச, சங்கத்தின் தந்தையர் தீர்மானித்தனர். அதேவண்ணம், மதில் சுவர்களால் சூழப்பட்டிருந்த கோட்டைபோல் தோன்றிய திருஅவை, அந்நிலையிலிருந்து வெளியேறி, புதிய வழியில் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும் என்றும் சங்கத் தந்தையர் முடிவெடுத்தனர்.

2ம் வத்திக்கான் சங்கம் துவக்கி வைத்த மாற்றங்களைக் குறித்து, தன் ஆவணத்தில் இவ்வாறு கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மாற்றங்களுக்கும், இரக்கத்திற்கும் உள்ள தொடர்பை, சங்கத்தின் துவக்கத்திலும், முடிவிலும் பேசிய இரு திருத்தந்தையரின் வார்த்தைகள் வழியே நினைவு கூர்ந்துள்ளார். 2ம் வத்திக்கான் சங்கத்தின் துவக்கத்தில், புனித 23ம் ஜான் அவர்கள் கூறிய மனதைத் தொடும் வார்த்தைகள் இதோ:

“கிறிஸ்துவின் மணமகளான திருஅவை, கண்டிப்பான கரத்தை உயர்த்துவதற்குப் பதில், இரக்கத்தின் மருந்தைப் பயன்படுத்த விரும்புகிறார். பொறுமை, கனிவு, பரிவு கொண்ட அன்னையாக, அனைவருக்கும், குறிப்பாக, தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற குழந்தைகளுக்கு தன்னை வெளிப்படுத்த விரும்புகிறார்”

அதே பாணியில், சங்கத்தின் இறுதியில் அருளாளர் ஆறாம் பவுல் அவர்கள் பேசியது இவ்வாறு இருந்த்து:

"2ம் வத்திக்கான் சங்கத்தின் தலையாயப் பண்பாக விளங்கியது, பிறரன்பு. நல்ல சமாரியர் என்ற மனநிலையே சங்கத்தின் ஆன்மீகமாக விளங்கியது. திருஅவையும், ஏனையச் சபைகளும் ஒருவர் ஒருவர் மீது கொண்டிருக்கும் பாசமும், மதிப்பும், இச்சங்கத்தில் வெளிப்பட்டன. குற்றங்கள் கடிந்துகொள்ளப்பட்டன; ஆனால், தவறு செய்தவர் மீது, அன்பும், மதிப்பும் காட்டப்பட்டன. நம்மைச் சூழந்துள்ள நோய்களைக் குறித்து, மனம் தளரும் வண்ணம் ஆய்வுகளை மேற்கொள்வதற்குப் பதில், மனதைத் தேற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன."

இரக்கத்தை வலியுறுத்தி இரு திருத்தந்தையர், சங்கத்தின் துவக்கத்திலும் இறுதியிலும் கூறிய வார்த்தைகளை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த இரக்கத்தை திருஅவை தொடர்ந்து சுவைக்கவும், குறிப்பாக, வன்முறைகளாலும், வெறுப்பாலும் காயப்பட்டு, கதறியழும் மனித குலத்திற்கும், பூமிக் கோளத்திற்கும் இரக்கம், மிக, மிக அவசியமான மருந்து என்பதை மனிதர்களாகிய நாம் உணரவும், இந்த யூபிலி ஆண்டு உதவவேண்டும் என்ற விண்ணப்பத்தை விடுத்துள்ளார்.

டிசம்பர் 13, இஞ்ஞாயிறன்று, உரோம் மறைமாவட்டத்தின் ஆயர் என்ற முறையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மறைமாவட்டத்தின் பேராலயமான புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில் புனிதக் கதவைத் திறக்கிறார். இதே ஞாயிறன்று, உலகெங்கும் உள்ள கத்தோலிக்க மறைமாவட்டங்களின் பேராலயங்களிலும், திருத்தலங்களிலும் உள்ள புனிதக் கதவுகள் திறக்கப்படுகின்றன.

உலகெங்கும் இரக்கத்தின் புனிதக் கதவுகள் திறக்கப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்திருந்த இந்த முடிவு, திருஅவை வரலாற்றில், புதுமையான முடிவு. இதுவரை கொண்டாடப்பட்ட யூபிலி ஆண்டுகளில், உரோம் நகரில் உள்ள நான்கு பசிலிக்கா பேராலயங்களில் மட்டுமே புனிதக் கதவுகள் குறிக்கப்பட்டன. இவையன்றி, சில சிறப்புக் காரணங்களுக்காக, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகளில் அமைந்துள்ள மூன்று திருத்தலங்களில் புனிதக் கதவுகள் குறிக்கப்பட்டிருந்தன. எனவே, இதுவரை கொண்டாடப்பட்ட யூபிலி ஆண்டுகளில், பரிபூரண பலனைப் பெற விழைவோர், இந்த ஏழு கோவில்களின் புனிதக் கதவுகளைத் நாடி, திருப்பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், இந்த நிலையை மாற்றி, மக்கள் தாங்கள் வாழும் இடங்களுக்கருகிலேயே புனிதக் கதவுகளைக் கடந்து, இறை ஆசீரின் நிறைவான பலன்களைப் பெறமுடியும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ளார். இதையும் தாண்டி, பரிபூரணப் பலனைப் பெறுவதற்கு, மேலும் சில புதுமையான, அதேநேரம் அர்த்த்தமுள்ள வழிகளையும் அவர் அறிவித்துள்ளார்.

நோயினாலும், வயது முதிர்ச்சியாலும் வீட்டிலேயே அடைபட்டிருப்போர், தாங்கள் வாழும் இடங்களிலேயே, திருப்பலியில் பங்கேற்று, ஒரு சில வேண்டுதல்களை நிறைவேற்றுவதால், அவர்கள் நிறைவான பலன்களைப் பெறமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைபட்டிருப்போர், சிறையில் உள்ள சிற்றாலயங்களின் கதவுகள் வழியே நுழைவது, புனிதக் கதவின் வழி செல்வதற்கு ஈடு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இல்லங்களிலும் புனிதக் கதவுகள் உண்டு என்பதைக் காட்டும்வண்ணம், டிசம்பர் 18, வருகிற வெள்ளிக்கிழமை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் இயங்கி வரும் காரித்தாஸ் பிறரன்பு இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில் புனிதக் கதவைத் திறந்து வைக்கச் செல்கிறார் (Diocese of Rome - Caritas Hostel on Via Marsala). இப்புனித ஆண்டில், பிறரன்புப் பணிகளில் ஈடுபடுவோரும் நிறையாசீர் பலன்களைப் பெறமுடியும் என்று திருத்தந்தை அறிவித்துள்ளார்.

பிறரன்பு இல்லங்கள், சிறைச்சாலைகள், வயது முதிர்ந்தோர் தனியே வாழும் இல்லங்கள் அனைத்திலும் புனிதக் கதவுகள் உள்ளன, அங்கும் இறைவனின் ஆசீரை நிறைவாகப் பெறலாம் என்ற பரந்து விரிந்த உணர்வு, இந்த யூபிலி ஆண்டில் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. நாம் இறைவனைத் தேடிச் செல்வதைவிட, அவர் நம்மைத் தேடிவருவதே எப்போதும் நிகழும் உண்மை என்பதை, இந்த யூபிலி ஆண்டு நமக்கு உணர்த்தவேண்டும். இதையொத்த எண்ணங்களை, யூபிலி ஆண்டின் துவக்கத் திருப்பலியில், திருத்தந்தை தன் மறையுரையில் குறிப்பிட்டார்:

புனிதக் கதவு வழியே நாம் செல்லும்போது, நம் ஒவ்வொருவரையும் தனித் தனியே சந்திக்க வரும் இறைவனின் அளவற்ற அன்பை மீண்டும் கண்டுணரப் போகிறோம். கடவுளின் இரக்கத்தைக் குறித்து நாம் இந்த ஆண்டில் உறுதி பெறுவோம். கடவுளின் இரக்கத்தால் நம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று பேசுவதற்கு முன், அவரது தீர்ப்பினால் தண்டிக்கப்படுவோம் என்று பேசும்போது, இறைவனுக்கும், அவரது இரக்கத்திற்கும் நாம் தவறிழைக்கிறோம் (புனித அகுஸ்தீன்). தீர்ப்புக்கு முன், இரக்கத்தை வைக்கவேண்டும்; இரக்கத்தின் ஒளியில்தான் இறைவனின் தீர்ப்பு எப்போதும் செயலாற்றும். அன்பு செய்யப்படுகிறவர்கள், பயம் கொள்ளக்கூடாது என்பதால், புனிதக் கதவின் வழியே செல்லும்போது, நமது பயத்தை ஒதுக்கிவிடுவோம்.

இறைவனின் இரக்கம், பரிவு, கனிவு, பாசம், அன்பு, இவை அனைத்தின் ஒட்டுமொத்த வடிவமாக நம்மைத் தேடி, நம்மில் ஒருவராக வரும் குழந்தை இயேசுவை வரவேற்க நமக்கு வழங்கப்பட்டுள்ள காலம், திருவருகைக் காலம். இறைவனைத் தேடி, ஏழு மலைகள், ஏழு கடல்கள் தாண்டிச் செல்லவேண்டாம். இறைவனும், அவரது திருமகனும் நம்மைத் தேடி ஏற்கனவே வந்து, நமக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்; எனவே நாம் மகிழந்து ஆர்ப்பரிக்கவேண்டும் என்பதை வலியுறுத்த, திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறை, ‘Gaudete Sunday’ அதாவது, ‘மகிழும் ஞாயிறு’ என்று கொண்டாடுகிறோம். இறைவனைச் சந்திப்பதால் எழும் மகிழ்வைப்பற்றி அழுத்தமாகக் கூறுகின்றன, இன்றைய வாசகங்கள்.

"இறைவன் வருகிறார். சந்திக்கத் தயாராகுங்கள்" என்று திருமுழுக்கு யோவானின் குரல் பாலைவனத்தில் ஒலித்ததாக, சென்ற வார நற்செய்தியில் வாசித்தோம். இறைவனைச் சந்திக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று மக்கள் எழுப்பியக் கேள்விகளுக்கு, "சாக்குத் துணி அணிந்து, சாம்பல் பூசி, சாட்டைகளால் உங்களையே அடித்துக்கொண்டு கடும் தவம் செய்யுங்கள்" என்ற பதிலை யோவானிடமிருந்து எதிர்பார்த்தனர், மக்கள். ஏனெனில் யோவானே அத்தகைய கடும் தவங்களைச் செய்து வந்தவர். ஆனால், யோவான் கூறிய பதில் மிக எளியது. பகிர்வு, மன்னிப்பு, இரக்கம், நீதி இவற்றைக் கடைபிடிக்கும்படி திருமுழுக்கு யோவான் வலியுறுத்தினார்.

லூக்கா நற்செய்தி 3: 10-18

 “இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்”

“உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் வசூல் செய்யாதீர்கள்”

“நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்”

என்ற மிக எளிதான, அடிப்படையான பதில்களே திருமுழுக்கு யோவானிடமிருந்து வந்தன. யோவானின் பதில்கள், இன்று, நமக்கும், நம்மைச் சுற்றி சமுதாயத்தின் பல நிலைகளில் இருப்பவருக்கும், குறிப்பாக, அரசுத் துறை, காவல்துறை, நீதித் துறை ஆகிய துறைகளில் பணியாற்றுவோருக்குச் சொல்லப்பட்டதுபோல் ஒலிக்கின்றன.

வாழ்வின் அடிப்படை உண்மைகள் மிக மிக எளிமையானவை. அவற்றைத் தேடி எங்கும் செல்லவேண்டாம், அவை நம்மைத் தேடி வருகின்றன, அவை நம்மைச் சுற்றியே எப்போதும் உள்ளன. நாம்தான் அவற்றைக் காணத் தவறுகிறோம். இந்த அற்புத பாடத்தைச் சொல்லும் விழாதானே, கிறிஸ்மஸ்! கடவுளைத் தேடி காடு, மலை, பாலைநிலம் என்று இஸ்ரயேல் மக்கள் அலைந்தபோது,  அவர் ஒரு பச்சிளம் குழந்தையாய் மக்கள் மடியில் வந்து அமர விரும்பினார். கடவுளை இவ்வளவு எளிமையாய் காணமுடியும், அடையமுடியும் என்று சற்றும் கற்பனை செய்து பார்க்கமுடியாத அம்மக்கள், இக்குழந்தை கடவுளாக இருக்கமுடியாது என்று தீர்மானித்து, மீண்டும் கடினமான வழிகளில் கடவுளைத் தேடிக் கொண்டிருந்தனர்.

நம் கதை என்ன? நாம் எவ்வகையான கடவுளை, எந்தெந்த இடங்களில் தேடுகிறோம்? எளிய வடிவில் நம் மத்தியில் வாழும் இறைவனைச் சந்திக்க நாம் என்னென்ன முயற்சிகள் எடுத்து வருகிறோம்? கிறிஸ்மஸ் விழாவுக்கு முன்னர், நாம் மேற்கொள்ளக்கூடிய நல்லதோர் ஆன்ம ஆய்வு இது. இந்த ஆய்வில் நாம் காணும் எளிய பதில்கள் நம்மை வியப்படையச் செய்யும். சுற்றி வளைக்காமல் சொல்லப்படும் நேரடியான, எளிதான, தெளிவான, பதில்கள் பல நேரங்களில் நம் நெற்றியில் வந்து அறையும் அடிபோல் இருக்கும். இத்தகைய எளிய பதில்கள் நம்மைப் பொறிகலங்கச் செய்யும்.

இத்தகைய எளிய உண்மைகளை நாம் துவங்கியுள்ள இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டு முழுவதும் உணர முயல்வோம். இரக்கமே இறைவன், அன்பே இறைவன் என்பது வெறும் சொற்களாக விவிலியத்தை அலங்கரிக்காமல், நம் வாழ்வில் அந்த உண்மையை உணரவும், அதை பிரதிபலிக்கவும் யூபிலி ஆண்டு நமக்கு உதவட்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.