2015-12-12 15:25:00

ஒப்புரவு அருளடையாளத்தின் மதிப்பை மீண்டும் கண்டுணர அழைப்பு


டிச.12,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆரம்பித்து வைத்துள்ள இரக்கத்தின் யூபிலி ஆண்டு, ஒப்புரவு அருள் அடையாளத்தைப் பெறுவதற்கும், இரக்கத்தை வெளிப்படுத்தும் பணிகளில் ஈடுபடவும் விசுவாசிகளுக்கு அழைப்பு விடுக்கின்றது என்று தாய்லாந்து தலத்திருஅவைத் தலைவர் கூறியுள்ளார்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டை முன்னிட்டு, தாய்லாந்து தலைநகர் பாங்காக் கத்தோலிக்கருக்கு மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள, பாங்காக் பேராயர் கர்தினால் பிரான்சிஸ் சேவியர் Kriengsak Kovithavanij அவர்கள், யூபிலி ஆண்டு வழங்கும் பரிபூரண பலனைப் பெறுவதற்கு ஒப்புரவு அருளடையாளம் அவசியம் என்று கூறியுள்ளார்.

உடல் சார்ந்த பணிகள் பற்றி நாம் தெரிந்து வைத்துள்ளோம், ஆனால், ஆன்மீகப் பணிகள் பற்றி குறைவாகவே புரிந்து வைத்துள்ளோம் என்றும், ஆன்மீகப் பணிகள் நமக்கு மிகவும் அவசியமானவை என்றும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் Kovithavanij.

உலகில் மற்ற மறைமாவட்டங்களில் இடம்பெறுவது போன்று, டிசம்பர் 13, இஞ்ஞாயிறன்று பாங்காக் நகரும் தனது புனிதக் கதவைத் திறக்கும் என்று கூறியுள்ள கர்தினால் Kovithavanij அவர்கள், இது, திருத்தந்தையிடமிருந்து நமக்குக் கிடைத்துள்ள சிறப்புக் கொடை என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

துன்புறும் அனைவரிலும் கிறிஸ்து தமது உடலை நினைவுகூர அழைக்கிறார், இயேசுவை அறியாதவர்களுக்கு அவரை அறிவிப்பது, அறியாமையில் இருப்பவர்க்குக் கற்பிப்பது, கடவுள் பற்றிய சந்தேகத்தில் வாழ்பவர்க்கு உளவியல்படி தெளிவுபடுத்துவது உட்பட ஆன்மீகப் பணிகளையும் விசுவாசிகள் ஆற்றுமாறு கேட்டுள்ளார் பாங்காக் கர்தினால் Kovithavanij.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.