2015-12-12 14:57:00

உரோம் தூய ஜான் இலாத்தரன் பசிலிக்கா புனிதக் கதவு திறப்பு


டிச.12,2015.  திருவருகை காலத்தின் மூன்றாம் ஞாயிறாகிய டிசம்பர் 13, இஞ்ஞாயிறன்று உரோம் தூய ஜான் இலாத்தரன் பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றி புனிதக் கதவைத் திறந்து வைப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் மறைமாவட்டத்தின் தலைமைப் பேராலயமான தூய ஜான் இலாத்தரன் பசிலிக்காவில், உரோம் மறைமாவட்ட ஆயரான திருத்தந்தை அவர்கள், இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்குத் திருப்பலி நிறைவேற்றி புனிதக் கதவைத் திறந்து வைப்பார். இதே நாளில், உலகின் ஏறக்குறைய எல்லா மறைமாவட்டப் பேராலயங்களிலும் தல ஆயர்கள் புனிதக் கதவைத் திறந்து வைப்பார்கள். இத்துடன் இரக்கத்தின் யூபிலி ஆண்டு நிகழ்வுகளும் ஆரம்பமாகும். உரோம் மேரி மேஜர் பசிலிக்கா புனிதக் கதவு சனவரி முதல் தேதியன்றும், தூய பவுல் பசிலிக்கா புனிதக் கதவு டிசம்பர் 13ம் தேதியன்றும் திறக்கப்படும்.

மேலும், இஞ்ஞாயிறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அருள்பணியாளராகத் திருப்பொழிவு பெற்றதன் 46வது ஆண்டு நிறைவாகும்.

இன்னும், Guadalupe அன்னை மரியா விழாவான இச்சனிக்கிழமை(டிச.12) மாலை ஆறு மணிக்கு  வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிறைவேற்றுவது இந்நாளைய அவரின் திட்டத்தில் உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.