2015-12-11 15:08:00

கர்தினால் Furnoவின் மறைவுக்கு திருத்தந்தை இரங்கல் தந்தி


டிச.11,2015. இத்தாலிய கர்தினால் Carlo Furno அவர்கள் இறையடி சேர்ந்ததையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் அனுதாபங்களையும், செபங்களையும் தெரிவிக்கும் தந்தி செய்தி ஒன்றை கர்தினால் ஆஞ்சலோ சொதானோ அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

டிசம்பர் 09, இப்புதனன்று, தன் 94வது வயதில் இறையடி சேர்ந்தார் கர்தினால் Carlo Furno. இவரின் அடக்கச் சடங்குத் திருப்பலியை இவ்வெள்ளி மாலையில், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நிறைவேற்றினார் கர்தினால் சொதானோ. இத்திருப்பலியின் இறுதியில் கர்தினால் Carlo Furno அவர்களின் உடலுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இறுதி மரியாதைச் செலுத்தி செபித்தார்.

கர்தினால் Furno அவர்கள், திருப்பீடத்தின் தூதரகப் பணிகளுக்குப் பல ஆண்டுகளாக, குறிப்பாக திருப்பீடத் தூதராக நற்பணியாற்றியதையும், எருசலேமின் திருக்கல்லறை பக்த அமைப்பின் தலைவராகவும், உரோம் மேரி மேஜர் பசிலிக்காவின் தலைமைக்குருவாகவும் பணியாற்றியதையும் தனது தந்திச் செய்தியில் நினைவுகூர்ந்து பாராட்டியுள்ள திருத்தந்தை, அவரின் ஆன்மா நிறை சாந்தியடைய, Salus Populi Romani அன்னை மரியாவிடம் செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலியின் தூரின் நகரில் 1921ம் ஆண்டு பிறந்த கர்தினால் Furno அவர்கள், ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் திருப்பீடத் தூதரகப் பணிகளை, குறிப்பாக, மத்திய கிழக்கிலும், இலத்தீன் அமெரிக்காவின் ஏழை நாடுகளிலும் ஆற்றியுள்ளார். இவர், 1944ம் ஆண்டில் 2ம் உலகப்போர் சமயத்தில் குருவாகத் திருப்பொழிவு பெற்றார் .

கர்தினால் Furno அவர்களின் மறைவையடுத்து, திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை, 216 ஆகக் குறைந்துள்ளது. இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதி பெற்றோர் 117 பேர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.