2015-12-11 13:46:00

கடுகு சிறுத்தாலும்.. : இறந்த கிளி பறந்துவிட்டது


கிளி ஒன்றை கூண்டினுள் வைத்து சென்னைவாசி ஒருவர் வளர்த்து வந்தார். ஒரு முறை அவர் ஆந்திரா செல்லும்போது, கிளி சொல்லிற்றாம், ''என் ஜோடிக் கிளி அங்கிருக்கும். அதனிடம் நான் இங்கு கூண்டில் இருப்பதாகச் சொல்லுங்கள்'' என்று. அவரும் தன் வேலை முடிந்தபின், சிரமப்பட்டு, காட்டில் தனியாக இருந்த அந்தக் கிளியைக் கண்டு விபரம் சொல்ல, அது உடனே கண்ணீர் உகுத்து, கீழே சுருண்டு விழுந்துவிட்டது. 'அடடா, இந்தக் கிளி இறந்ததற்கு நாம் காரணமாகி விட்டோமே,' என்று வருத்தப்பட்டு, ஊருக்கு வந்து கூண்டுக் கிளியிடம் விபரம் சொல்ல, அக்கிளியும் கண்ணீர் உகுத்து கூண்டினுள்ளேயே விழுந்துவிட்டது. நம்மால் இந்தக் கிளியும் அநியாயமாய் இறந்து விட்டதே என்ற வருத்தத்துடன் கூண்டைத் திறந்தார் அவர். உடனே அந்தக் கிளி பறந்து போய் பக்கத்திலிருந்த மரக்கிளையில் அமர்ந்தது. அதிர்ச்சியான அவர்,  ''உன் ஜோடிக் கிளி இறந்தது தெரிந்தும், நீ என்னிடம் நடித்துத் தப்பிவிட்டாயே!'' என்றார். அதற்கு அக்கிளி, 'என் ஜோடிக் கிளி இறக்கவில்லை. கூண்டில் அடைபட்ட நான் தப்பிக்கும் வழியை, உங்களிடமே அது சொல்லி அனுப்பியிருக்கிறது' என்று கூறிவிட்டு, தன் ஜோடிக் கிளியைத் தேடி, ஆந்திராவுக்குப் பறந்துவிட்டது. 

புத்தியுள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.