2015-12-11 15:14:00

திருமண முறிவு குறித்த புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன


டிச.11,2015. இரக்கத்தின் யூபிலி ஆண்டை முன்னிட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டுவந்த திருமண முறிவு குறித்த புதிய நடைமுறைகள் டிசம்பர் 8, இச்செவ்வாயன்று அமலுக்கு வந்துள்ளன.

திருமண முறிவு வழங்கும் நடைமுறையில் திருத்தந்தையால் கொண்டுவரப்பட்டுள்ள சீர்திருத்தம், தல ஆயருக்கு அதிகப் பங்களிக்கின்றது மற்றும் இதனை இலவசமாகச் செய்வதற்கும் வழி அமைக்கிறது.

கத்தோலிக்கத் திருஅவையில் நீண்ட காலமாக இருக்கின்ற திருமணத்தின் முறிவுபடாத்தன்மை கோட்பாட்டை உறுதிப்படுத்தும் அதேவேளை, ஆன்மாக்களின் மீட்பில் அக்கறை கொண்டு, திருமண முறிவு வழங்கும் முறைகளில் இப்புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இம்மாற்றங்களை அறிவிக்கும் புதிய நடைமுறைகள், திருத்தந்தை தனது விருப்பத்தினால் எழுதும், motu proprio என்ற  இரு கடிதங்களில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. “இயேசு ஆண்டவர் கனிவுடைய நீதிபதி(Mitis Iudex Dominus Iesus)”என்ற தலைப்பில் ஒரு கடிதம் வெளியிடப்பட்டது. இது இலத்தீன் வழிபாட்டுமுறை திருஅவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுள்ளது. “இயேசு, கனிவும் இரக்கமும் உள்ளவர்(Mitis et misericors Iesus)”என்ற தலைப்பில் வெளிவந்த திருத்தந்தையின் கடிதம், கீழை வழிபாட்டுமுறை திருஅவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.