2015-12-11 15:33:00

சென்னை-கத்தோலிக்க ஆலயங்களில் கிறிஸ்மஸ் ஆடம்பரம் இரத்து


டிச.11,2015. தமிழகத் தலைநகர் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவருக்கு உதவும் நோக்கத்தில், கத்தோலிக்க ஆலயங்களில் இவ்வாண்டு கிறிஸ்மஸ் பெருவிழாவின் ஆடம்பரக் கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு நூறாண்டுக்கு மேற்பட்ட காலத்தில் கடும் இயற்கைப் பேரிடரைச் சந்தித்துள்ள சென்னையில் இடர்துடைப்புப் பணிகளுக்கு நிதி சேமிக்கும் நோக்கத்தில் கிறிஸ்மஸ் பெருவிழா ஆடம்பரக் கொண்டாட்டங்களை இரத்து செய்வதாக, சென்னைத் தலத்திருஅவை அறிவித்துள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.

இந்தியத் திருஅவையும் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளுக்கென ஏற்கனவே விண்ணப்பித்துள்ளது. இந்திய ஆயர்களின் பிறரன்பு அமைப்பான காரித்தாசும் ஏற்கனவே நிவாரணப் பணிகளை ஆற்றி வருகின்றது.

சென்னையில் பல கத்தோலிக்க ஆலயங்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்ததாகவும் கூறினார் சென்னை-மயிலை உயர்மறைமாவட்ட முதன்மைக் குரு எஸ்.ஜே. அந்தோணி அவர்கள். 

மேலும், சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பற்றி தி இந்து நாளிதழிடம் பேசிய இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் Prakash Javadekar அவர்கள், மேற்கத்திய நாடுகள் கடந்த 150 ஆண்டுகளாக தொழிற்சாலைகளை அதிகப்படுத்தியதே காரணம் என்று தெரிவித்தார்.

ஆதாரம் : The Tablet /வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.