2015-12-11 15:17:00

சவுதி அரேபியாவில் முதன்முறையாக பெண்கள் ஓட்டுப்போடவுள்ளனர்


டிச.11,2015. பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் உள்ள சவுதி அரேபியாவின் வரலாற்றில் முதன்முறையாக பெண்கள், இச்சனிக்கிழமையன்று நடைபெறும் தேர்தலில் ஓட்டுப்போடவுள்ளனர்.

மக்கள் பிரதிநிதிகளைத் தேர்தெடுக்கும் தேர்தல் ஒன்றில் பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவது சவுதி அரேபியாவில் நடைபெறும் அரிதான நடவடிக்கை என்றும், அந்நாட்டில் நடைபெறும் நகராட்சித் தேர்தலில், பெண்கள் வாக்களிக்கவும், போட்டியிடவும் அனுமதிக்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் செய்திகள் கூறுகின்றன.

பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் உள்ள அந்நாட்டில் அரசு நிர்வாகத்தில் பெண்களும் பங்கேற்கும் வகையில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும்வேளை, நகராட்சித் தேர்தல்களில் பெண்கள் பங்கேற்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக 900க்கும் மேற்பட்ட பெண்கள் இந்தத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தல் பிரச்சாரத்திலும் உற்சாகமாக ஈடுப்பட்டனர்.

சவுதியில் பொது இடங்களில் இருபாலாரும் ஒன்றாக இருப்பதற்கு கடுமையான தடைகள் உள்ளன. இதனால் ஆண் மற்றும் பெண் வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் தேர்தல் மேடையில் பங்கேற்க முடியாது. அதேபோல், பெண்கள் பொது இடங்களில் தங்களின் முகத்தைக் காட்ட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : BBC /வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.