2015-12-11 15:45:00

இலவச கண் சிகிச்சையில் ஏழைகள் பார்வை இழப்பு, ஆயர் கவலை


டிச.11,2015. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் நடத்தப்பட்ட இலவச கண் சிகிச்சை முகாமில் ஏறக்குறைய நாற்பது ஏழைகள் பார்வையை இழந்திருப்பது குறித்து தனது கவலையை வெளியிட்டுள்ளார் அம்மாநில ஆயர் ஒருவர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் பூர்வீக மக்கள் அதிகமாக வாழும் பார்வானி மாவட்டத்தில் அரசின் ஆதரவுடன், ஓர் அரசு-சாரா அமைப்பு நடத்திய இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் குறித்து கருத்து தெரிவித்த இன்டோர் ஆயர் Chacko Thottumarickal அவர்கள், ஏழைகளிடம் அக்கறையின்றி இருப்பதையே இந்நடவடிக்கை காட்டுகின்றது என்று தெரிவித்தார்.

ஏழைகளுக்கு உரிய மதிப்பு வழங்கப்படாமல், அவர்கள் பொருள்கள் போல் நடத்தப்படுவதையே இது காட்டுகின்றது என்றும், இன்டோரில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு ஏறக்குறைய 500 டாலர் வீதம் செலவாவதால் ஏழைகள் இலவச முகாம்களுக்கு வருகின்றனர் என்றும் கூறினார் ஆயர் Thottumarickal.

இவ்வாறு நடந்திருப்பது முதல் முறை அல்ல என்றும், 2012ம் ஆண்டில் இன்டோரில் நடத்தப்பட்ட இலவச கண் அறுவை சிகிச்சை முகாமில் பத்துப் பேர் கண்பார்வையை இழந்தனர் என்றும், ஏராளமான வளங்களைக் கொண்டிருக்கும் அரசு ஏழைகளின் பார்வைத்திறனைப் பாதுகாக்க இயலாமல் உள்ளது என்றும், அதேநேரம், திருஅவையும் இத்தகைய முகாம்களை நூறு விழுக்காடு வெற்றியோடு நடத்துகின்றது என்றும் கூறினார் ஆயர் Thottumarickal.       

கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை பார்வானி மாவட்டத்தில் நடத்தப்பட்ட முகாமில் 86 பேருக்கு கண் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இதில் குறைந்தது 40 பேர் பார்வை இழந்தனர்.

இதற்கிடையே, பார்வையிழந்த ஒவ்வொருவருக்கும் ஆயுள் முழுவதும் ஐந்தாயிரம் ரூபாய் மாத ஓய்வூதியம் வழங்குவதாக, மாநில அரசு கடந்த செவ்வாயன்று அறிவித்துள்ளது.   

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.