2015-12-11 15:39:00

ஆசியா,பசிபிக் பகுதியில் எல் நீனோ காலநிலை தொடர்ந்து தீவிரம்


டிச.11,2015. ஆசியாவிலும், பசிபிக் பகுதியிலும் தொடர்ந்து காணப்படும் எல் நீனோ காலநிலை, 1998ம் ஆண்டுக்குப் பின்னர் தற்போது மிகவும் வலுவடைந்திருப்பதாகவும், இந்நிலை 2016ம் ஆண்டின் ஆரம்பக் கட்டத்திலும் தொடரும் எனவும் ஐ.நா.வின் புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.  

காலநிலை குறித்து முன்னறிவிப்பு, காலநிலைக்கேற்ப பயிரிடுதல், காலநிலை ஆபத்தைக் களைவதற்கு நீண்ட கால யுக்திகள் போன்றவை அவசியம் என்று, எல் நீனோ காலநிலை குறித்த மூன்றாவது ஆலோசனை அறிக்கை வலியுறுத்துகிறது.

ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான ஐ.நா. பொருளாதார-சமூக அவையும்(ESCAP), ஆப்ரிக்கா மற்றும் ஆசியப் பகுதிக்கான எச்சரிக்கை அமைப்பும்(RIMES) இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.

தென்கிழக்கு ஆசிய நாடுகள், குறிப்பாக, இலங்கையும் இந்தியாவும் கன மழையினால் கடும் வெள்ளப்பெருக்கையும், பாப்புவா நியு கினி, கிழக்குத் திமோர், வனுவாத்து போன்ற சில பசிபிக் தீவு நாடுகள் கடும் வறட்சி, தண்ணீர்ப் பற்றாக்குறை, உணவுப் பாதுகாப்பின்மை போன்ற பிரச்சனைகளையும் எதிர்நோக்குவதாக அவ்வறிக்கை கூறியுள்ளது.

பல பசிபிக் நாடுகளுக்கு முக்கிய உள்நாட்டு உற்பத்தியாக உள்ள வேளாண்மையில் எல் நீனோ காலநிலை பாதிப்பு அதிகம் இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.     

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.