2015-12-10 16:26:00

பாத்திமா அன்னை செய்தியின் கரு, இரக்கம் – திருத்தல ஆயர்


டிச.10,2015. துவங்கியுள்ள இரக்கத்தின் யூபிலி ஆண்டில், திருத்தலங்கள் நோக்கி திருப்பயணங்கள் மேற்கொள்ளும் அதே ஆர்வத்துடன், நாம் உள்ளார்ந்த ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளவேண்டும் என்று, பாத்திமா திருத்தலத்தின் ஆயர், அந்தோனியோ அகுஸ்தோ தோஸ் சாந்தோஸ் மார்த்தோ (António Augusto dos Santos Marto) அவர்கள் கூறினார்.

டிசம்பர் 8, இச்செவ்வாயன்று, போர்த்துக்கல் நாட்டின் புகழ்பெற்ற திருத்தலமான பாத்திமா அன்னை திருத்தலத்தின் கோவிலில் உள்ள புனிதக் கதவைத் திறந்த, Leiria-Fatima மறைமாவட்டத்தின் ஆயர் மார்த்தோ அவர்கள், ஆன்மீக வாழ்வில் மறுமலர்ச்சி பெறுவது குறித்து தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

'இரக்கம்' என்ற வார்த்தை, பாத்திமா அன்னை வழங்கிய செய்தியின் முக்கிய கருவாக உள்ளது என்பதால், இந்த யூபிலி, பாத்திமா அன்னையின் செய்தியை உலகறியச் செய்யும் என்று இத்திருத்தலத்தின் அதிபர், அருள்பணி Carlos Manuel Pedrosa அவர்கள் கூறினார்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டில், பாத்திமா திருத்தலத்தில், ஒப்புரவு அருள் அடையாளத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அருள்பணி Pedrosa அவர்கள் கூறினார்.

பாத்திமாவில், அன்னை மரியா காட்சியளித்த நிகழ்வின் முதல் நூற்றாண்டு விழா, 2017ம் ஆண்டு நிகழவிருப்பதும், இதையொட்டி தான் அங்கு செல்ல விழைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.