2015-12-10 16:05:00

திருத்தந்தை : இறைவனின் இரக்கம் நம்மை அரவணைக்க அனுமதிப்போம்


டிச.10,2015. ஒரு குழந்தையை அணைத்து, பாதுகாக்கும் பெற்றோரைப்போல, இறைவனின் இரக்கம் நம்மை அரவணைக்கிறது என்றும், அதற்கு நம்மையே அனுமதிக்க வேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் கூறினார்.

டிசம்பர் 10, இவ்வியாழனன்று காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றியத் திருப்பலியில், 'அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்' என்று துவங்கும் இறைவாக்கினர் எசாயாவின் வாசகத்தை, தன் மறையுரையின் மையக்கருத்தாகக் கொண்டார் திருத்தந்தை.

இஸ்ரயேல் மக்கள் எண்ணிக்கையிலும், சக்தியிலும் மிகுந்தவர்கள் என்பதால் அல்ல, மாறாக, அவர்கள் எண்ணிக்கையில் குறைந்து, வலுவிழந்தவர்கள் என்பதாலேயே அவர்களை இறைவன் தேர்ந்தெடுத்தார் என்று தன் மறையுரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை.

தன்னையே வருத்தி ஒறுத்தல் முயற்சிகள் செய்துவந்த ஒரு புனிதரிடம், இறைவன் இன்னும் வேண்டும் என்று கேட்டபோது, அப்புனிதர், தன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை என்று சொன்னதாகவும், அதற்கு கடவுள், 'உன் பாவங்களை என்னிடம் கொடு' என்று சொன்னதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

இறைவனின் இரக்கத்தைச் சுவைக்கும் நாம், அடுத்தவர் மீதும், அவர்களது வலுவின்மை மீதும் அக்கறை கொள்ளமுடியும் என்று, தன் மறையுரையின் இறுதியில், திருத்தந்தை கூறினார்.

தங்களது 12வது ஆலோசனைக் கூட்டத்திற்காக வத்திக்கானுக்கு வருகை தந்துள்ள திருத்தந்தையின் ஒன்பது ஆலோசகர்களான கர்தினால்கள், திருத்தந்தை ஆற்றிய திருப்பலியில் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.