2015-12-09 16:06:00

புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் சிறப்பு ஒலி-ஒளி காட்சி


டிச.09,2015. டிசம்பர் 8, இச்செவ்வாயன்று, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் ஆரம்பமான இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மாலை 7 மணியளவில், பேராலய வளாகத்தில் சிறப்பு ஒலி-ஒளி காட்சியொன்று இடம்பெற்றது.

"ஒளி உண்டாகட்டும்: நமது பொதுவான இல்லத்தை ஒளியேற்ற" என்ற தலைப்பில் நிகழ்ந்த இந்த காட்சியினை, Paul G. Allen's Vulcan நிறுவனம், Li Ka Shing அறக்கட்டளை, Oceanic Preservation கழகம், Obscura Digital என்ற தொழில்நுட்ப நிறுவனம் மற்றும்,  உலக வங்கியின் Connect4Climate அமைப்பு ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலும், தற்போது பாரிஸ் மாநகரில் நடைபெற்றுவரும் COP 21 எனப்படும் காலநிலை மாற்ற உலக உச்சி மாநாடும் இந்த ஒலி-ஒளி காட்சி உருவாகக் காரணம் என்று அமைப்பாளர்கள் கூறினர்.

ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த ஒலி-ஒளி காட்சிக்குக் காரணமாக இருந்த Li Ka Shing அறக்கட்டளையைச் சேர்ந்த ஒருவர் CNA கத்தோலிக்க செய்திக்கு அளித்த பேட்டியில், "அன்பு ஒன்றே இவ்வுலகைக் காப்பாற்ற முடியும் என்பதைச் சொல்லும் இந்த காட்சியில், எங்கள் நிறுவனமும் பங்கேற்றதில் பெருமை கொள்கிறோம்" என்று கூறினார்.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.