2015-12-09 15:16:00

திருத்தந்தையின் மறைக்கல்வி உரை – புனித ஆண்டு பிறந்துள்ளது


டிச.,09,2015. டிசம்பர் 8ம் தேதி, இச்செவ்வாய்க்கிழமை, அமல உற்பவ அன்னை திருவிழாவன்று, இரக்கத்தின் யூபிலி புனித ஆண்டை துவக்கி வைத்ததன் அடையாளமாக, தூய பேதுரு பசிலிக்கா பேராலய புனிதக் கதவைத் திறந்து வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் மறைக்கல்வி உரையில், இரக்கத்தின் யூபிலி ஆண்டு குறித்தே எடுத்துரைத்தார்.

தூய பேதுரு பேராலய வளாகத்தில் புனிதக்த் கதவை திறந்து வைத்ததுடன், இரக்கத்தின் யூபிலி ஆண்டைத் துவக்கி வைத்தோம்.  ஆழமான மாற்றங்கள் இடம்பெறும் இன்றைய உலகில், மனிதப் பாவங்களை வெற்றி கண்டு, நமக்கு உண்மையான விடுதலையைக் கொணரக்கூடிய ஒரே வல்லமையான இறை இரக்கத்தின் நம்பிக்கைமிகு சாட்சியாக விளங்க திருஅவை அழைப்புப் பெற்றுள்ளது என்பதை இந்த சிறப்பு மிக்க புனித ஆண்டு நமக்கு நினைவூட்டுகிறது. நம்மிடையே இறைமகனின் மனு உருவில், காணும் வகையில் பிரசன்னமான இறை இரக்கமே, நற்செய்தியின் இதயமாக உள்ளது. இறைவனுக்கு மிகவும் விருப்பமானது இரக்கமே என்பதை இந்த புனித ஆண்டு நமக்கு நினைவுறுத்துகிறது. இறைவனுக்கு நெருக்கமான இந்த இறை இரக்கம், நம் வாழ்விலும், திருஅவையின் அமைப்பு முறைகளிலும் தன் வெளிப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். இன்றைய உலகில் இரக்கமும் மன்னிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தும், தன்னலமும், இவ்வுலக இன்பமே சிறந்த நலம் என எண்ணும் கோட்பாடும், நேர்மையின்மையும் மேலோங்கியும் நிற்கின்றன. கிறிஸ்தவ வாழ்விலும், வெளிவேடம் மற்றும் உலகப் போக்குகளால், இரக்கமும் மன்னிப்பும் முக்கியத்துவம் இழந்து, மறைந்து வருகின்றன. இறை இரக்கத்தைக் குறித்து நாம் மறந்து போவதால், பாவத்தை அதன் நிலைகளில் பார்ப்பதுகூட, நம் கண்களுக்கு மறைக்கப்பட்டதாக உள்ளது. இதனால்தான், இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டு மிக முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. நம் வாழ்வில் இறை இரக்கத்தின் செயல்பாட்டைக் குறித்து நாம், மேலும் கவனமுடன் இருக்க உதவுமாறு, இறைவனை நோக்கி மன்றாடுவோம். அதேவேளை, இந்த உலகில் மாற்றத்தின் சக்தியாக செயல்படும் இறை இரக்கத்திற்கு, மேலும் பலனுள்ள சாட்சியாக நாம் செயல்படுவதற்கான வரத்தையும் வேண்டுவோம்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.