2015-12-09 15:50:00

இரக்கத்தின் யூபிலி வெற்றிபெற வாழ்த்தும் மனித உரிமை ஆர்வலர்


டிச.09,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு, அனைத்து மக்களும் அமைதியில் வாழும் அடிப்படை உரிமை பெற்றவர்கள் என்பதை உலகின் கவனத்திற்குக் கொணர்ந்துள்ளது என்று, இந்தியாவில் வாழும் மனித உரிமை ஆர்வலர் ஒருவர் கூறியுள்ளார்.

சமுதாயம் மற்றும் மத சார்பற்ற கல்வி மையம் என்ற ஓர் அமைப்பை மும்பை மாநகரில் நடத்தி வரும் திருவாளர் இராம் புனியானி (Ram Puniyani) அவர்கள், இரக்கத்தின் வழியே இவ்வுலகில் அமைதியை எவ்விதம் கொணர முடியும் என்பதை அழுத்தந்திருத்தமாக உணர்த்தியுள்ள திருத்தந்தையை தான் பாராட்டுவதாக, ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

மனித சமுதாயத்தின் மீது அன்பு என்ற அடிப்படை கருத்தை ஒவ்வொரு மதமும் கூறியுள்ளது என்றாலும், மதத்தின் பெயரால் இன்று வன்முறைகள் கூடிவருவது வேதனை தருகிறது என்றும், இந்த வன்முறைகளில் அதிகம் துன்புறுவது, அப்பாவி மக்களே என்றும், புனியானி அவர்கள் எடுத்துரைத்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள இந்த இரக்கத்தின் யூபிலி வெற்றிகரமாக நடைபெறவேண்டும் என்றும், அனைத்து மனிதரின் அடிப்படை உரிமைகளும், மாண்பும் இவ்வாண்டில் அதிகம் காக்கப்படவேண்டும் என்றும் தான் வாழ்த்துவதாக இப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.