2015-12-09 15:32:00

அமைதி ஆர்வலர்கள் : 2001ல் நொபெல் அமைதி விருது. - பகுதி 2


டிச.09,2015. 1895ம் ஆண்டில் நொபெல் உயில் எழுதி வைத்த ஆல்பிரட் நொபெல் அவர்கள், நாடுகளுக்கிடையே உடன்பிறப்பு உணர்வை உருவாக்கப் பணியாற்றியவர்கள், ஆயுதங்கள் ஒழிப்பு அல்லது குறைப்புக்கு உழைத்தவர்கள், அமைதியை ஊக்குவிக்கும் மற்றும் அமைதிக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து நடத்தியவர்கள் ஆகியோருக்கு நொபெல் அமைதி விருது வழங்கப்படுமாறு குறித்து வைத்துள்ளார். அதன்படி, 2001ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதை, ஐக்கிய நாடுகள் நிறுவனமும், அப்போது அந்நிறுவனப் பொதுச் செயலராகப் பணியில் இருந்த கோஃபி அன்னான் அவர்களும் பகிர்ந்து கொண்டனர். அமைதியான ஓர் உலகை மேலும் சிறப்பாக உருவாக்குவதற்கு, கோஃபி அன்னான் அவர்களும், ஐக்கிய நாடுகள் நிறுவனமும் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்காக இந்த அமைதி விருது வழங்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் எழுபது வருட வரலாற்றில் அந்நிறுவனமும், அதன் சிறப்பு நிறுவனங்கள், அதனோடு தொடர்புடைய நிறுவனங்கள், நிதியமைப்புகள் மற்றும் அந்நிறுவன அலுவலகர்கள் இந்த மதிப்புமிக்க விருதை 11 முறைகள் பெற்றுள்ளனர். UNHCR என்ற ஐ.நா.வின் புலம்பெயர்ந்தவர் அமைப்பு 1954, 1981, என, இரு ஆண்டுகளில் இவ்விருதைப் பெற்றுள்ளது. மேலும், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொதுச் செயலர்களாகிய கோஃபி அன்னான்(1997-2006), Dag Hammarskjöld(1953,ஏப்ரல்-1961,செப்டம்பரில் விமான விபத்தில் இறக்கும்வரை பொதுச் செயலர்) ஆகிய இருவரும் இவ்விருதைப் பெற்றுள்ளனர். 2001ல் ஐ.நா. நிறுவனத்துடன் இணைந்து இவ்விருதைப் பெற்று உரையாற்றிய கோஃபி அன்னான் அவர்கள், ஐ.நா. பணியாளர்கள் தங்களின் பணிகளை மேலும் மிகுந்த அர்ப்பணத்துடன் ஆற்றுவதற்கும், முன்னோக்கிச் செல்வதற்கும் இவ்விருது தூண்டுகோலாய் உள்ளது என்று கூறினார்.

அன்பர்களே, நம் வத்திக்கான் வானொலியின் தினசரிச் செய்திகளில் குறைந்தது ஒரு செய்தியாவது ஐக்கிய நாடுகள் நிறுவனம் அதாவது சுருக்கமாக நாம் சொல்லும் ஐ.நா. பற்றியதாக இருக்கின்றது. இரண்டாம் உலகப் போரின் அழிவுகளைக் கண்ட உலக சமுதாயம், உலகில் அத்தகைய போர்களைத் தவிர்க்கும் நோக்கத்திலும், உலகில் அமைதியை விரும்பியும் 1945ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி ஐக்கிய நாடுகள் நிறுவனத்தை உருவாக்கியது. இதன் தலைமையகம் நியுயார்க் நகரில் மன்ஹாட்டனிலும், மற்ற முக்கிய அலுவலகங்கள், ஜெனீவா, நைரோபி, மற்றும் வியன்னா பெரு நகரங்களிலும் அமைந்துள்ளன. இந்நிறுவனங்களுக்குத் தேவையான நிதி உதவியை உறுப்பு நாடுகளும், தன்னார்வலர்களும் வழங்குகின்றனர். உலக அளவில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டுவது, மனித உரிமைகளை ஊக்குவிப்பது, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியைப் பேணுவது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, பஞ்சம், இயற்கைப் பேரிடர்கள், ஆயுதம் ஏந்திய மோதல்கள் ஆகியவை இடம்பெறும் இடங்களில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது போன்றவை ஐ.நா.வின் முக்கிய பணிகளாகும். இரண்டாம் உலகப் போரின்போது, 1943ல் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் Franklin D. Roosevelt அவர்கள், நாடுகளின் கூட்டமைப்பின் தொடர்ச்சியாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தை முன்மொழிந்தார். இதன் பயனாக, 1945ம் ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதங்களில் நடைபெற்ற கருத்தரங்கில் ஐ.நா.வின் அரசியல் அமைப்பு தொகுக்கப்பட்டது. 1945ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி இந்த அரசியல் அமைப்பு அமலுக்கு வந்தது. எனவே 2015ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்துக்கு வயது எழுபதாகும்.

ஐ.நா. ஆரம்பிக்கப்பட்டபோது 51 உறுப்பு நாடுகளே அதில் இருந்தன. ஆனால், 1960களில் உலகில் குறிப்பிடத்தக்க வகையில், பரவலாக காலனி ஆதிக்கம் அகன்றபோது இதன் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது ஐ.நா.வில் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. இந்நிறுவனத்தில் ஆறு முக்கிய பிரிவுகள் உள்ளன. முக்கியமானது ஐ.நா. பொது அவை. அடுத்து அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த சில தீர்மானங்ளை எடுக்கும் பாதுகாப்பு அவை. இதில் 5 நிரந்தர நாடுகளும், பத்து நிரந்தரமற்ற நாடுகளும் உறுப்புகளாக உள்ளன. அடுத்ததாக, அனைத்துலக அளவில் பொருளாதார, சமூக மற்றும் வளர்ச்சி ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் பொருளாதார, சமூக அவை(ECOSOC). ஐ.நா.பொது அவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட 54 உறுப்பு நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன. இவற்றின் பதவிக்காலம் மூன்றாண்டுகள். உலகில் நிலையான வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுப்பது இதன் பொறுப்பாகும். நான்காவது, ஆய்வுகள், தகவல்கள் மற்றும் பிற வசதிகளை அமைக்கும் செயலகம், 5வது அனைத்துலக நீதி மன்றம். நெதர்லான்ட்ஸ் நாட்டின் Hague நகரிலுள்ள அமைதி மாளிகையில் இது அமைந்துள்ளது. ஆறாவது ஐ.நா. புரவலர் அவை. இது ஏழு உறுப்பு நாடுகளால் நிர்வகிக்கப்படுகின்றது. இவை தவிர, உலக வங்கி குழு, உலக நலவாழ்வு நிறுவனம், உலக உணவு திட்ட அமைப்பு, உலக உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம், யுனெஸ்கோ, யூனிசெப் போன்ற சிறப்பு நிறுவனங்களும் ஐ.நா. அமைப்பில் உள்ளன. ஐ.நா.வின் மிக முக்கிய அதிகாரி பொதுச் செயலராவார். ஐ.நா. பாதுகாப்பு அவையால் பரிந்துரைக்கப்படும் இவர் ஐ.நா.பொது அவையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவரின் பதவிக் காலம் ஐந்தாண்டுகள். அப்பதவிக் காலம் மேலும் புதுப்பிக்கப்படலாம். தற்போது, தென் கொரிய நாட்டினரான பான் கி மூன் அவர்கள், 2007ம் ஆண்டிலிருந்து பொதுச் செயலராகப் பணியாற்றி வருகிறார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும், முன்னாள் சோவியத் யூனியனுக்கும், அவற்றின் கூட்டு நாடுகளுக்கும் இடையே பனிப்போர் நடந்த ஆரம்பகாலப் பத்தாண்டுகளில் உலகின் அமைதியைக் காப்பதில் ஐ.நா. பிரச்சனைகளைச் சந்தித்தது. அதேநேரம், கொரியாவிலும், காங்கோவிலும் இடம்பெற்ற சண்டைகளை முடிவுக்குக் கொண்டுவருவதிலும், 1947ம் ஆண்டில் இஸ்ரேல் என்ற தனி நாடு உருவாக்கப்பட்டதிலும் ஐ.நா. முக்கிய பங்காற்றியது. 1970களில் உலகில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு ஐ.நா. செலவழித்த நிதி, அதன் அமைதிகாக்கும் பணிகளுக்கு ஆகியதைவிட அதிகமானது. பனிப்போர் முடிவுற்ற பின்னர் உலகில் பல இடங்களில் அமைதியைக் காப்பதற்காக ஐ.நா. அமைதிப்படைகள் அமர்த்தப்பட்டு அதில் வெற்றியும் காணப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும், அரபு நாடுகளுக்கும் இடையே இடம்பெற்ற போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கண்காணிப்பதற்கு 1948ம் ஆண்டில் ஐ.நா. அமைதிப்படைகள் மத்திய கிழக்கில் முதன்முதலில் நிறுத்தப்பட்டன. இன்று 120க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான படைவீரர்கள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள், 69 இடங்களில் ஐ.நா. நீலநிற தலைக்கவசம் அணிந்து ஐ.நா. அமைதிப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த அமைதிப் பணிகளில் 3,326க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பிறரை மன்னித்துவிடு. ஏனெனில் பிறர் மன்னிப்பதற்கு தகுதியுடையவர்கள் என்பதற்காக அல்ல, நீ மனஅமைதியில் வாழ வேண்டும் என்பதற்காக. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.