2015-12-09 15:46:00

அமல அன்னை மரியாவுக்கு திருத்தந்தையின் மலர் வளைய அஞ்சலி


டிச.09,2015. டிசம்பர் 8, இச்செவ்வாய் மாலை 4 மணியளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரின் மையத்தில் அமைந்துள்ள ஸ்பானிய சதுக்கத்திற்குச் சென்று, அங்கு நிறுவப்பட்டுள்ள அமல அன்னை மரியாவின் உருவத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு ஆரம்பமாகியுள்ள டிசம்பர் 8ம் தேதியன்று நடைபெற்ற இந்த வழிபாடு, திருவெளிப்பாடு நூலிலிருந்து வாசிக்கப்பட்ட ஒரு வாசகத்துடன் ஆரம்பமானது.

இதைத் தொடர்ந்து, திருத்தந்தை அவர்கள், கன்னித் தாயான மரியாவிடம், குடும்பங்கள், குழந்தைகள், இளையோர், வயது முதிர்ந்தோர் சிறைப்பட்டோர் மற்றும் நோயுற்றோர் அனைவரின் சார்பில், ஒரு செபத்தைக் கூறினார்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திருத்தந்தையர் பங்கேற்கும் இந்த வழிபாட்டு  நிகழ்வில், இவ்வாண்டு, UNITALSI என்ற அமைப்பினரின் கண்காணிப்பில் வாழும் 100க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள், திருத்தந்தையுடன் பங்கேற்று, செபித்தனர்.

இஸ்பானிய சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ள ஒரு தூணின் மீது, அமல அன்னையின் உருவம் வைக்கப்பட்டுள்ளது. உரோம் நகர் தீயணைக்கும் துறையைச் சார்ந்த 220க்கும் மேற்பட்டோர், இத்திரு உருவத்தை இங்கு நிறுவியதால், ஒவ்வோர் ஆண்டும், அத்துறையைச் சேர்ந்தவர்கள், இயந்திர ஏணியில் ஏறி, அன்னையின் கரங்களில் ஒரு மலர் வளையம் வைப்பது வழக்கம் என்பது குறிப்பிடத் தக்கது.

இஸ்பானிய சதுக்கத்தை விட்டுக் கிளம்பியத் திருத்தந்தை, அங்கிருந்து நேராக, புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயம் சென்று, அங்கு, Salus Populi Romani, அதாவது, உரோமைய மக்களின் காவலர் என்ற பெயரில் நிறுவப்பட்டிருக்கும் அன்னை மரியாவின் திரு உருவத்திற்கு முன்னர் அமைதியாகச் செபித்தார்.

துவங்கியுள்ள இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையொட்டி, 2016ம் ஆண்டு, சனவரி முதல் தேதி கொண்டாடப்படும் இறைவனின் அன்னை மரியா திருநாளன்று, புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயத்தின் புனிதக் கதவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திறந்துவைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.