2015-12-08 15:31:00

தூய பேதுரு பசிலிக்கா புனிதக் கதவு திறக்கும் திருவழிபாடு


டிச.08,2015. இச்செவ்வாய் வத்திக்கான் வளாகத்தில் இடம்பெற்ற திருப்பலியில் இறுதி ஆசிருக்கு முன்னதாக புனிதக் கதவு திறக்கும் திருவழிபாடு தொடங்கியது. சகோதர சகோதரிகளே, நம் மீட்பர் இயேசுவில் நாம் கொண்டுள்ள விசுவாசத்தால் வழிநடத்தப்பட்டு மற்றும் அமல அன்னை மரியின் பாதுகாவலில் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை ஆரம்பிக்கிறோம். நம் முன்னால் புனிதக் கதவு திறக்கிறது. இப்புனிதக் கதவு கிறிஸ்துவே. நம் இதயங்களை தூய ஆவியாரின் செயலுக்குத் திறந்து வைப்போம். கிறிஸ்துவின் பெயரில் அமைதியில் புனிதக் கதவை நெருங்கிச் செல்வோம் என்று ஒரு தியாக்கோன் முதலில் வளாகத்தில் வாசித்தார். 

பின்னர் பீடப் பரிசாரகர் குழுவைத் தொடர்ந்து, அருள்பணியாளர்கள், துறவிகள், பொதுநிலையினர் பிரதிநிதிகள் குழுக்களும், ஆயர்களும், கர்தினால்களும் பவனியாக, தூய பேதுரு பசிலிக்காவின் புனிதக் கதவின் முன் சென்று நின்றனர். அதன்பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் சென்று புனிதக் கதவின் முன்நின்றார். அங்கு ஏற்கனவே நின்றுகொண்டிருந்த முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை வாழ்த்திய பின்னர் செபம் சொன்னார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எல்லாம் வல்ல இறைவா, இரக்கமும் மன்னிப்பும் நிறைந்தவரே, நற்செய்தியின் மகிழ்வில் சகோதர சகோதரிகளை அன்பு கூரவும், அருளின் ஆண்டில் வாழவும் எங்களுக்கு வரம் தாரும். தூய ஆவியாரைத் தொடர்ந்து எம்மில் பொழிந்தருளும் என்று செபித்து அமல அன்னையின் உதவியையும் நாடினார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர் நீதியின் கதவுகள் எனக்குத் திறக்கட்டும் என்று சொல்லி, மரபுப்படி தனது இரு கரங்களாலும் புனிதக் கதவை மூன்று முறை தள்ளித் திறந்தார். பின்னர் அவ்விடத்தில் நின்று சிறிது நேரம் செபித்தார். பின்னர் அவர் பசிலிக்கா உள்ளே போய் நிற்க, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் புனிதக் கதவு வழியாகச் சென்றார். பின்னர் கர்தினால்களும் ஆயர்களும், மற்றவர்களும் புனிதக் கதவு வழியாகச் சென்றனர். பசிலிக்காவில் தூய பேதுரு கல்லறைப் பீடத்தின் முன்பாக வைக்கப்பட்டிருந்த பெரிய சிலுவை முன்நின்று தலைவணங்கிச் செபித்து தனது அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இறுதியில், உங்கள் தந்தை இரக்கமுள்ளவராக இருப்பது போல் நீங்களும் இரக்கமுள்ளவராக இருங்கள், அமைதியில் செல்லுங்கள் என்று தியாக்கோன் ஒருவர் கூறினார். அத்துடன் புனிதக் கதவு திறக்கும் திருவழிபாடு நிறைவடைந்தது. அதன்பின்னர் இத்தாலிய அரசுத்தலைவர் ஜார்ஜோ மத்தரெல்லா உட்பட இத்திருப்பலியில் கலந்துகொண்ட நாடுகளின் பிரதிநிதிகள் குழு புனிதக் கதவு வழியாகச் சென்று செபித்தனர்.

இச்செவ்வாய் காலை திருப்பலிக்குப் பின்னர் பகல் 12 மணிக்கு மூவேளை செப உரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். புனிதக் கதவு திருவழிபாட்டில் கலந்துகொண்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு நன்றி சொல்லியதோடு அனைத்து விசுவாசிகளும் அவரை வாழ்த்துமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். அன்பு நேயர்களே, 2015ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி தொடங்கியுள்ள இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி நிறைவடையும். இந்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு காலத்தில் கருணைச் செயல்களில் ஈடுபடுவோம். “நம் வானகத் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல்...(லூக்.6:36)” நாமும் இரக்கமுள்ளவர்களாக வாழ்வோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.