2015-12-08 15:44:00

உலக வர்த்தக நிறுவனக் கூட்டத்தில் திருப்பீடம்


டிச.08,2015. இறக்குமதி வரிகளை விதிப்பதன் வழியாக, வெளிநாட்டு வர்த்தகப் போட்டியிலிருந்து உள்நாட்டுத் தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்தும் அரசுகளின் செயல்களும் கொள்கைகளும், ஏற்கனவே சலுகை பெற்றுள்ள குழுக்களுக்கே சாதகமாக உள்ளன என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெனீவாவிலுள்ள ஐ,நா. அலுவலகங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், WTO என்ற உலக வர்த்தக நிறுவனத்தின் பொது அவையில் இத்திங்களன்று உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.

பொது நலனை முன்னேற்றுவதில், வர்த்தக உறவுகளில் சமத்துவத்தையும், பல நாடுகளின் பங்கேற்பையும் திருப்பீடம் விரும்புகிறது என்றும் கூறினார் பேராயர் தொமாசி.  

பல நாடுகள் பங்கேற்கும் உறுதியான வர்த்தகம், சமூக மற்றும் பொருளாதார உறவுகள் அனைத்திற்கும் மையமாக இருக்கும்போது, வர்த்தக உறவுகள் மனிதரின் தவிர்க்க இயலாத மாண்பையும், உரிமைகளையும் மையம் கொண்டிருக்கும் என்றும் கூறினார் பேராயர் தொமாசி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.