2015-12-08 15:11:00

இரக்கத்தை நிரம்பப் பெறும் ஓர் புனித ஆண்டாக அமையச் செபிப்போம்


டிச.08,2015. நற்செய்தியின் முதன்மைச் சொல் இரக்கம் என்று இச்செவ்வாய் நண்பகல் மூவேளை செப உரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலையில் உரோம் ஸ்பானிய வளாகத்திலுள்ள அமலமரி நினைவுச் சின்னம் முன்நின்று செபிக்கவிருப்பதை அறிவித்தார்.

அன்னை மரியாவிடம் பிள்ளைக்குரிய பக்தியின் செயலாக, உரோம் மேரி மேஜர் பசிலிக்காவுக்கும் இச்செவ்வாய் மாலையில் தான் செல்லவிருப்பதாக அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியாவிடம், திருஅவையையும், முழு மனித சமுதாயத்தையும், குறிப்பாக, உரோம் நகரையும் அர்ப்பணித்துச் செபிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நாளில் இரக்கத்தின் கதவு வழியாக நான் சென்றேன், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் சென்றார்கள், நாம் எல்லாரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு நம் வாழ்த்தைத் தெரிவிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கத்தை நிரம்பப் பெறும் ஓர் புனித ஆண்டாக உங்களுக்கும், மற்றவர்களுக்கும் இருப்பதற்குச் செபியுங்கள், இதேபோல் எனக்கும் இருப்பதற்கு இயேசுவிடம் கேளுங்கள், எனக்கு இவ்வருள் அதிகம் தேவைப்படுகின்றது என்றும் வத்திக்கான் வளாகத்தில் மூவேளை செப உரைக்குக் கூடியிருந்த எழுபதாயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.