2015-12-08 12:35:00

இரக்கத்தின் யூபிலி திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை


டிச.08,2015. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஆரம்பத்தில் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தை தலைமையேற்று நடத்திய திருப்பலியில் அவர் வழங்கிய மறையுரை:

அன்பு சகோதர, சகோதரிகளே, இன்னும் சிறிது நேரத்தில், இரக்கத்தின் புனிதக் கதவைத் திறக்கும் மகிழ்வைப் பெறுவேன். இந்த எளிமையான சடங்கினை, இன்றைய இறைவார்த்தையுடன் இணைத்துச் சிந்திக்கும்போது, அடையாளச் செறிவு மிகுந்ததாய் தெரிகிறது. ஆச்சரியத்தில் ஆழ்ந்திருந்த ஓர் இளம்பெண்ணிடம், "அருள் நிறைந்தவரே வாழ்க!" என்று (லூக்கா 1:28) வானதூதர் கபிரியேல் சொன்னதை, இன்றைய இறைவாக்கில் கேட்டோம்.

வானதூதர் கபிரியேல் மரியாவின் இல்லத்தில் நுழைந்தபோது, மிக ஆழமான, அறியமுடியாத மறையுண்மைகள், மரியாவின் மகிழ்விற்குக் காரணமாக அமைந்தன. நிறைவான அருள், மனித வரலாற்றை மாற்றக்கூடிய வகையில், மனித மனங்களை உருவாக்கக்கூடும்.

அமல உற்பவப் பெருவிழா, கடவுளின் அன்பை வெளிப்படுத்துகிறது. இந்த அன்பு, பாவத்தை மன்னிப்பது மட்டுமல்ல, அந்தப் பாவத்தின் கறையே மரியாவின் மீது விழாதவாறு காத்தது. எதிர்வரும் ஆபத்தை முன்னோக்கிப் பார்த்து, காப்பது  இறைவனின் அன்பு.

தொடக்க நூலில் நாம் கேட்ட வார்த்தைகள், நம் தினசரி வாழ்வை படம்பிடித்துக் காட்டுகிறது. நம் வாழ்வை நாமே சமாளிக்கமுடியும் என்ற உணர்வில், இறைவனின் திட்டங்களுக்கு கீழ்ப்படியாமல் இருக்கும் நம் அனுபவம், இந்த வாசகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

பாவத்தின் வரலாற்றை, இறைவனின் அன்பு, மன்னிப்பு என்ற வரலாற்றின் ஒளியில் மட்டுமே புரிந்துகொள்ளமுடியும். இறைவன் தரும் இந்த வாக்குறுதியின் உன்னத சாட்சியாக, அமலியாய் பிறந்த கன்னி நமக்கு முன் நிற்கிறார்.

இந்த சிறப்பான புனித ஆண்டு, அருளின் கொடை. புனிதக் கதவு வழியே நாம் செல்லும்போது, நம் ஒவ்வொருவரையும் தனித் தனியே சந்திக்க வரும் இறைவனின் அளவற்ற அன்பை மீண்டும் கண்டுணரப் போகிறோம். கடவுளின் இரக்கத்தைக் குறித்து நாம் இந்த ஆண்டில் உறுதி பெறுவோம். கடவுளின் இரக்கத்தால் நம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று பேசுவதற்கு முன், அவரது தீர்ப்பினால் தண்டிக்கப்படுவோம் என்று பேசும்போது, இறைவனுக்கும், அவரது இரக்கத்திற்கும் நாம் தவறிழைக்கிறோம் (புனித அகுஸ்தீன்). தீர்ப்புக்கு முன், இரக்கத்தை வைக்கவேண்டும்; இரக்கத்தின் ஒளியில்தான் அவரது தீர்ப்பு எப்போதும் செயலாற்றும். அன்பு செய்யப்படுகிறவர்கள், பயம் கொள்ளக்கூடாது என்பதால், புனிதக் கதவின் வழியே செல்லும்போது, நமது பயத்தை ஒதுக்கிவிடுவோம்.

இன்று நாம் புனிதக் கதவைக் கடந்து செல்லும்போது, மற்றொரு கதவையும் நினைவுகூருவோம். இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் கலந்துகொண்ட தந்தையர், 50 ஆண்டுகளுக்கு முன், இவ்வுலகிற்குத் திறந்துவைத்த அக்கதவை நினைவில் கொள்வோம். இந்தச் சங்கம், அனைத்திற்கும்  மேலாக,ஒரு சந்திப்பின் சங்கமாக அமைந்தது. இன்றைய உலகின் மனிதர்களுக்கும், திருஅவைக்கும் இடையே நிகழ்ந்த உண்மையான சந்திப்பு அது. பல ஆண்டுகளாக தனக்குள்ளேயே வாழ்ந்துவந்த திருஅவை, தூய ஆவியாரின் தூண்டுதலால், வெளியேறி வந்து, மக்களுடன் மேற்கொண்ட சந்திப்பு அது. மக்களை, அவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் சந்திக்க திருஅவை வந்தது.

ஐம்பது ஆண்டுகளுக்குப் பின், மக்களைச் சந்திக்கும் மறைப்பணியை நாம் அதே சக்தியோடு, ஆர்வத்தோடு மீண்டும் மேற்கொள்கிறோம். இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் வழி வெளிப்பட்ட திறந்த மனநிலையை புறக்கணிக்கக் கூடாது என்ற சவாலை இந்த யூபிலி நமக்கு முன் வைக்கிறது. அருளாளர் 6ம் பவுல், சங்கத்தின் இறுதியில், சொன்ன நல்ல சமாரியரின் உணர்வு, நம்மிடமும் விளங்குவதாக. புனிதக் கதவின் வழியே நாம் கடந்து செல்லும்போது, நல்ல சமாரியரின் இரக்கம் நமதாக விளங்க, நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.