2015-12-08 15:18:00

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு ஆரம்பத் திருப்பலி


டிச.08,2015. அமல அன்னை விழாவாகிய டிசம்பர் 08, இச்செவ்வாய் அகில உலக கத்தோலிக்கத் திருஅவைக்கு மிக முக்கியமான நாள். இன்று, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தின் புனிதக் கதவின் முன் நின்று, நீதியின் கதவுகள் திறக்கட்டும் என்று சொல்லி புனிதக் கதவை தனது இரு கரங்களாலும் தள்ளித் திறந்து வைத்து இரக்கத்தின் சிறப்பு யூபிலி  ஆண்டை ஆரம்பித்து வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். “கடவுளின் நன்மைத்தனம் மற்றும் அன்புக்கு அருகில் இரக்கத்தின் யூபிலி நம் எல்லாரையும் அழைத்துச் செல்வதாக!” என்ற டுவிட்டர் செய்தியையும் இச்செவ்வாயன்று வெளியிட்டு இந்நாளை மேலும் சிறப்பித்து வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இன்று உரோம் நேரம் காலை 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டுத் திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை. இன்று காலையில் வானம் மந்தாரமாக, கார்மேகங்களால் நிறைந்திருந்து இலேசாக தூறல் விழுந்தாலும், அதிகாலை இருளான நேரத்திலே வத்திக்கானைச் சுற்றி ஏராளமான திருப்பயணிகள் கூட்டம். கடந்த நவம்பர் 13ம் தேதி பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதல்களை முன்னிட்டு, இத்தாலியில், குறிப்பாக, உரோமையில், இன்னும் குறிப்பாக வத்திக்கானைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்தாயிரம் காவல்துறையினர் அதிகப்படியாக பணியில் இருந்தனர். பயங்கரவாத அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது, இச்செவ்வாய் விழாத் திருப்பலியில் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். இம்மக்கள் எல்லாரும் நன்றாகப் பரிசோதிக்கப்பட்ட பின்னரே வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அதுவும் கொன்சிலியாசியோனே நெடுஞ்சாலையின் துவக்கத்திலே மக்கள் பரிசோதிக்கப்பட்டனர். இப்படி நாலா பக்கங்களிலிருந்தும் பரிசோதனைகள் நடந்தன. இத்தாலிய காவல்துறை, இராணுவம் மற்றும் பிற பாதுகாப்புத் துறையினரும், ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களும் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். இத்திருப்பலி நேரத்தில் விமானங்கள் எதுவும் வத்திக்கான் பகுதியில் பறக்கக் கூடாது என்ற ஆணையையும் இத்தாலிய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்தது.

இத்திருப்பலியில் கலந்து கொள்ள இத்தாலிய அரசுத்தலைவர் ஜார்ஜோ மத்தரெல்லா தனது மகள் லவ்ராவுடன் வந்திருந்தார். இத்தாலியப் பிரதமர் மத்தேயோ ரென்சி, அவரின் மனைவி அஞ்ஞேசே, இன்னும் பல முக்கிய அரசுப் பிரதிநிதிகள், பெல்ஜிய நாட்டு அரசர் ஆல்பர்ட், அரசி பவுலா, இளவரசர் லொரென்ஸ், இளவரசி Astrid, செக் குடியரசின் செனட் அவையின் உதவித் தலைவர் Miluse Horska, நாடாளுமன்ற உதவித் தலைவர் Petr Gadzik, ஜெர்மனியின் உதவி அரசுத்தலைவர் Bundestag johannes Singhammer, சான் மரினோ குடியரசின் தலைவர்கள் Nicola Renzi மற்றும் Lorella Stefanelli உட்பட பல பிரிதிநிதிகள் வந்திருந்தனர். உரோம் யூதமதத் தலைவர் Riccardo Di Segni அவர்கள் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டுக்கு நல்வாழ்த்துச் செய்தியும் வெளியிட்டுள்ளார். யூதர்கள் Chanukka'h ஒளி விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் இந்த யூபிலி ஆண்டு ஆரம்பிக்கின்றது. இருளும், அடக்குமுறையும், சகிப்பற்றதன்மையும் உள்ள இடத்தில் இந்த யூபிலி ஆண்டு ஒளியைக் கொண்டு வருவதாக என வாழ்த்தியுள்ளார் ரபி Di Segni. இன்று காலை 9.15 மணிக்கு வத்திக்கான் பசிலிக்காவிலுள்ள பியத்தா அன்னை மரியா பீடத்திற்கு முன்பாக, இத்திருப்பலியில் கலந்து கொள்ள வந்திருந்த நாடுகளின் பிரதிநிதி குழுக்களைச் சந்தித்து வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இதற்குப் பின்னர், கர்தினால்களுடன் பவனியாக திருப்பலி மேடைக்கு வந்து விழாத் திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருப்பலி தொடங்கியதும் கார்மேகம் இலேசாக கலைந்து கதிரவனின் ஒளி வீசத் தொடங்கியது. மலயாளம், சீனம், அரபு, ஸ்வாகிலி உட்பட பல மொழிகளில் விசுவாசிகள் மன்றாட்டு இடம்பெற்றது. குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளுடன் காணிக்கைப் பவனியில் காணிக்கைகளை எடுத்துச் சென்று திருத்தந்தையின் ஆசிர் பெற்றனர். பச்சிளங்குழந்தையையும், பிள்ளைகளையும் முத்தமிட்டார் திருத்தந்தை. இத்திருப்பலியின் இறுதி ஆசிருக்கு முன்னதாக புனிதக் கதவு திறக்கும் திருவழிபாடு தொடங்கியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.