2015-12-08 12:47:00

அமல அன்னை விழாவன்று, திருத்தந்தையின் மூவேளை செப உரை


டிச.08,2015. டிசம்பர் 8, இச்செவ்வாய், கொண்டாடப்பட்ட அமல அன்னை பெருவிழாவன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்தோருக்கு வழங்கிய மூவேளை செப உரை:

அன்பு சகோதர, சகோதரிகளே, நம் முதல் பெற்றோரின் வழி வந்த பாவத்திலிருந்து மரியன்னை காக்கப்பட்டார் என்பதை இன்று தியானிக்க வந்துள்ளோம். இறைவனின் அளவற்ற இரக்கத்தால் காப்பற்றப்பட்ட முதல் மனிதப் பிறவி, மரியா. இரக்கத்தின் யூபிலி துவங்கும் இந்நாளில், மரியாவை அன்போடு தியானிக்க விழைகிறோம்.

நாம் வாழ்வில் 'ஆம்' என்று சொல்லும்போது, அமல அன்னையின் விழாவில் நாம் முழுமையாகப் பங்கேற்கிறோம். வாழ்வில் நம்பிக்கை இழந்துள்ள நம் சகோதர, சகோதரிகளின் கண்ணீரைத் துடைக்க முன்வருவதன் வழி, நம் 'ஆம்' வெளிப்படுகிறது. இவர்களைக் குறித்தே இயேசு, "நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" (மத்தேயு 25: 35-36) என்று கூறினார்.

நாம் வாழ்வில் பெற்றுள்ள அனைத்தும் கொடை, அனைத்தும் இரக்கம் என்பதை, இன்றைய விழா நமக்கு உணர்த்துகிறது. இறைவனின் இரக்கத்தை மீண்டும் நாம் கண்டுகொள்ள, அன்னை மரியா நமக்குத் துணை புரிவாராக.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.