2015-12-07 15:35:00

திருத்தந்தை : கிறிஸ்தவர்களுக்கும் மனமாற்றம் அவசியம்


டிச.07,2015. வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்ற திருமுழுக்கு யோவான் அவர்களின் போதனையை மையமாக வைத்துப் பேசினார்.

நாம் ஏன் மனம் மாற வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி, மனமாற்றம் கடவுள் நம்பிக்கையற்றவர்களுக்கு மட்டுமல்ல, தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று ஏற்கனவே கருதுகிறவர்களுக்கும் அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நான் நன்றாகத்தானே இருக்கிறேன் என்பது உண்மையல்ல, நான் நன்றாகத்தானே இருக்கிறேன் என்று யாரும் சொல்லவும் முடியாது, இது தேவையற்ற துணிவில் சொல்வதாகும், நாம் எப்பொழுதும் மனம் மாற்றம் அடைய வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நான் ஏன் மனம் மாற வேண்டும்? இது நாத்திகர்களுக்கும் பாவிகளுக்கும் உரியது, நான் ஏற்கனவே நன்றாகத்தானே இருக்கிறேன், எனக்கு மனமாற்றம் அவசியமில்லை என்று நினைக்கலாம். ஆனால் நாம் சில தவறுகள் அல்லது முரண்பாடுகளால் துன்புறும்போது, நம் இதயத்தில் பகைமையின்றி செயல்படுகிறோமா அல்லது மன்னிப்புக் கேட்பவர்களை மன்னிக்கிறோமா? அழுவாரோடு உண்மையிலேயே அழுகின்றோமா? மகிழ்வாரோடு மகிழ்கின்றோமா? விசுவாசத்தை வெட்கப்படாமல் அறிவிக்கிறோமா? என்ற கேள்வியையும் எழுப்பினார் திருத்தந்தை.

இயேசு கொண்டிருந்த மனநிலையையே நாமும் எப்போதும் கொண்டிருக்க வேண்டும் என்றும், திருமுழுக்கு யோவான் அவர்களின் உரத்த குரல், கல்லான மற்றும் மூடிய இதயங்கள் கொண்ட இன்றைய மனித சமுதாயத்தின் பாலைநிலங்களிலும் அழுகின்றது, நாம் உண்மையிலே சரியான பாதையில்தான் செல்கிறோமா, நற்செய்தியின்படி வாழ்கின்றோமா என்று சிந்திக்கவும் வைக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

மீட்பு, பாகுபாடின்றி நம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுகின்றது, நான் புனிதமானவர், நான் தவறுகளே செய்யாதவர், நான் ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்டேன் என்று நம்மில் யாராலும் சொல்ல இயலாது, நமக்கு வழங்கப்படும் மீட்புக் கொடையை நாம் பெற வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். இதற்காக, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை நாம் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.