2015-12-07 16:34:00

திருத்தந்தை-அசிசி கிறிஸ்மஸ் குடில் விளக்குகளை ஒளியேற்றினார்


டிச.07,2015. இத்தாலியின் அசிசி நகர் பசிலிக்காவின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரம் மற்றும் குடிலின் அலங்கார விளக்குகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானிலிருந்து இஞ்ஞாயிறு மாலையில் ஒளியேற்றி வைத்தார்.

டுனிசியா நாட்டு குடியேற்றதாரர் சிலரைப் பாதுகாப்பாக லாம்பதூசா தீவுக்குக் கொண்டு வந்த படகில் அசிசி நகர் குடில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விளக்கேற்றும் நிகழ்வில் ஒலி-ஒளிச் செய்தி வழியாக மக்களிடம் பேசிய திருத்தந்தை, இயேசு நம்மோடு எப்போதும், மிகவும் துன்பம் நிறைந்த நேரங்களிலும் உடன் இருக்கிறார் என்று கூறினார். புலம்பெயர்ந்த மக்களிடம், நம் ஆண்டவர் மிக நெருக்கமாக உள்ளார், அதனால் நம்பிக்கையோடு உங்கள் தலைகளை நிமிர்த்தி நில்லுங்கள் என்றும் திருத்தந்தை கூறினார். அசிசி நகர் பசிலிக்காவில் பாப்பிறை இல்லத் தலைவர் பேராயர் Georg Ganswein அவர்கள் திருப்பலி நிறைவேற்றிய பின்னர் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் அசிசி காரித்தாஸ் உதவும் 31 புலம்பெயர்ந்த மக்களும் கலந்துகொண்டனர். இவர்கள், ஆப்கானிஸ்தான், காமரூன், நைஜீரியா, சிரியா ஆகிய நாடுகளிலிருந்து இத்தாலியில் அடைக்கலம் புகுந்துள்ளவர்கள்.

அசிசி நகர் பசிலிக்காவின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் அலங்காரங்கள், புலம் பெயர்ந்தோரை மையப்படுத்தி அமைந்துள்ளதால், அங்குள்ள கிறிஸ்மஸ் குடில், லாம்பதுசா தீவை வந்தடைந்த ஒரு படகைப் போல் உருவாக்கப்பட்டுள்ளது என்று, அசிசி திருத்தலத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

மேலும், வறிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, கிறிஸ்மஸ் பொம்மைகளை வழங்க, இத்தாலிய இரயில் துறை முன்வந்துள்ளது என்றும் அசிசி திருத்தலத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.