2015-12-07 15:33:00

வாரம் ஓர் அலசல் – அன்பின் வாழும் அடையாளங்களாக மாற...


டிச.07,2015. மிரட்டும் மழையில் இருந்து சென்னை தன்னை மெல்ல மெல்ல புதுப்பித்துக் கொண்டு வருகிறது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள், தூய்மைப் பணிகள் ஆகியவற்றால் சென்னையின் நிலை சீரடைந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை. நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் 350 கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தமிழகம், புதுச்சேரியில் மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இத்திங்கள் இ-தினத்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. அன்பர்களே, தமிழகத் தலைநகரில் வாழும் உறவுகள், நண்பர்களிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தபோது... எனது மகன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கச் சென்றுள்ளான், குடும்பங்கள் உணவு சமைத்துக் கொண்டுபோய்ப் பரிமாறுகின்றன, பல தன்னார்வலர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள், எந்த அரசியல்வாதியும் மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை, வாழ்வதற்குப் பணம் மட்டும் இருந்தால் போதாது, ஒற்றுமையே உண்மையான பலம், மனிதம் இன்னும் செத்துவிடவில்லை, மனிதம் மதத்தை வெற்றி காண்கிறது, ஒவ்வொருவரும் தன்னில் நம்பிக்கை வேண்டும்.. என்பதை உணர முடிகின்றது

இப்படி மேலும் பல வாழ்க்கைப் பாடங்களைச் சொன்னார்கள். “சென்னைப் பெருமழையில் கடந்த ஒரு வாரமாக சாதியும் மதமும் காணப்படவில்லை, யாரும் அவற்றைத் தேடித் தந்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்வதாக” ஓர் ஊடகத்தில் பிரசுரமாகியிருந்தது. ஆலயங்களிலும், மசூதிகளிலும் பள்ளிகளிலும் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர், இதனால் முஸ்லிம்கள், சாலையில் தொழுகை நடத்தியதையும் பார்த்தபோது, ஒரு டிசம்பர் ஆறாம் தேதி பிரிக்க நினைத்தது. ஆனால் இன்னொரு டிசம்பர் ஆறு இணைத்து விட்டது என்ற உணர்வே மேலோங்கியது. சென்னையிலும், கடலூர், பாண்டிச்சேரி பகுதிகளிலும் பெய்த கன அடைமழையை வானத்து சுனாமி என்று வர்ணித்து, சாதி, மத, ஏழை, செல்வந்தர் என்ற வேறுபாடின்றி மக்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து நிவாரணப் பணிகளை ஆற்றி வருகின்றனர். அன்பர்களே, சென்னை மழை உறங்கிக்கொண்டிருந்த மனிதத்தை உசுப்பிவிட்டுள்ளதைக் காண முடிகின்றது. ஒரு தன்னார்வலர் பகிர்ந்து கொண்டதைக் கேட்போம்.. இஞ்ஞாயிறு காலையில் உணவு விநியோகம் செய்யச் சென்றபோது ஒரு பெண்ணுக்குத் தட்டில் ஒரு கரண்டி உணவை வைத்துவிட்டு அடுத்த கரண்டி உணவை வைப்பதற்கு முற்பட்டபோது, அந்தப் பெண் என்னிடம், ஒரு கரண்டி எனக்குப் போதும், எனக்குப் பின்னால் வருபவர்களுக்குக் கொடுங்கள். அடுத்து வருபவர்களுக்கு இல்லையெனில் கஷ்டமாகிவிடும் என்று சொன்னார். இந்தச் செயல் அங்கு நின்றிருந்த அனைவரையும் ஒரு கணம் மௌனத்தில் ஆழ்த்திவிட்டது.

அன்பர்களே, சென்னை கனமழைப் பாதிப்பு, இறைமையை, மனிதத்தில் வெளிப்படுத்தியுள்ளது என்றே சொல்ல வைக்கின்றது. இராஜபாளையம் அருகில் உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுதுரைச்சி. இந்த 18 வயது இளம்பெண்  பிறந்த ஒரு மாதத்தில் அவரின் அம்மாவும், ஏழு மாதத்தில் அப்பாவும் இறந்து விட்டனர். இவரது பாட்டியும், வீடுகளில் வேலை பார்த்து இவரைப் படிக்க வைத்துள்ளார். மெழுகுதிரி ஒளியில் படித்து பிளஸ்–டூ தேர்வில் 1125 மதிப்பெண் வாங்கியிருக்கிறார். பொன்னுதுரைச்சி தற்போது சென்னையில் உள்ள பிரபலமான கல்லூரி ஒன்றில் பி.காம்.(கார்ப்பரேட்) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்குக் காரணமாக இருப்பவர் திருமதி ஷோபனா ரமேஷ். இவர் பிரபலமான ஐ.ஏ.எஸ். அதிகாரியான வேத நாராயணனின் மகள். “படிப்பிற்கும், பாசத்திற்கும் ஏங்கிய பொன்னுதுரைச்சியின் ஆசையை எல்லாம் நான் தீர்த்துவைக்கிறேன். நீ எவ்வளவு படிக்க விரும்புகிறாயோ அதுவரை படிக்கவைக்கிறேன். இதுவரை தாயை பார்த்திராத உனக்கு நான் தாயாகவும் இருக்கிறேன். நீ என்னை அம்மாவாக ஏற்றுக் கொள்வாயா?” என்று கேட்டு தன் வீட்டிலே பொன்னுவை வைத்திருக்கிறார் ஷோபனா ரமேஷ்.

அன்பர்களே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு வலியுறுத்தும் கருணைச் செயல்கள், ஏற்கனவே சென்னை கன மழை பாதிப்பிலும், திருமதி ஷோபனா ரமேஷ் போன்றவர்களிலும் வெளிப்பட்டு வருகின்றன. டிசம்பர் 08, இச்செவ்வாயன்று இந்த யூபிலி ஆண்டு, “நம் தந்தையாம் இறைவன் இரக்கமுள்ளவராய் இருப்பது போல்...(லூக்.6:36)” நாமும் இரக்கமுள்ளவர்களாக வாழ்வதற்கு அழைப்பு விடுக்கிறது. இந்த உலகம் மென்மையானதாக மாற, இந்த உலகில் வாழும் நாம் அன்பின் உயிருள்ள அடையாளங்களாக மாற இந்த யூபிலி ஆண்டு அழைப்பு விடுக்கிறது.

2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி வரை சிறப்பிக்கப்படும் இந்த ஆண்டு முழுவதும் நாம் ஆற்றவேண்டிய ஏழு, உடல் மற்றும் ஆன்மீக கருணைநிறைப் பணிகள் உள்ளன. இவையனைத்துமே இயேசுவின் போதனைகள் சுட்டிக்காட்டுபவை.

பசித்திருப்பவருக்கு உணவளித்தல், தாகமாயிருப்பவரின் தாகம் தணித்தல், வீடற்றவர்க்குப் புகலிடம் அளித்தல், நோயாளிகளைச் சந்தித்தல், சிறையிலிருப்பவர்களைச் சந்தித்தல், இறந்தவரை அடக்கம் செய்தல், ஏழைகளுக்குத் தர்மம் இடுதல் என்று உடலால் செய்யக்கூடிய இரக்கச் செயல்களையும்,  கடவுள் பற்றிய அவநம்பிக்கையில் வாழ்பவர்க்கு உளவியல் ஆலோசனை வழங்குதல், அறியாமையில் வாழ்பவர்க்கு உதவுதல், பாவிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அறிவுரை கூறுதல், வேதனையில் இருப்பவரைத் தேற்றுதல், துன்புறுத்தியவரை மன்னித்தல், பிறரின் தவறுகளைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்தல், உயிரோடு வாழ்பவர் மற்றும் இறந்தோர்க்காகச் செபித்தல் என்று ஆன்மீக அளவில் செய்யக்கூடிய ஏழு இரக்கச் செயல்களைப் பரிந்துரைத்துள்ளது திருஅவை. இந்த இரக்கச் செயல்களை, 2004ம் ஆண்டு கடல் சுனாமியிலும், தற்போதைய வானத்துச் சுனாமியிலும் பலர் ஆற்றி வருவதைப் பார்க்கிறோம். இச்செயல்கள் சுனாமிக் காலங்களில் மட்டுமல்லாமல் எல்லாக் காலங்களிலும் சாதி மதப் பாகுபாடின்றி இடம்பெற வேண்டும். தேவைக்கு அதிகமாக உணவுப்பொருள்களை வாங்கி புழுக்களுக்குக் கொடுப்பதைவிட அளவோடு வாங்கலாம், மதுவுக்கும் சிகரெட்டுக்கும் செலவழிக்கும் பணத்தை பசித்திருப்பவரின் பசியை ஆற்ற உதவலாம். சமைக்கும்போதே ஒரு கைப்பிடி அரிசியை அதிகமாகப் போட்டு கைவிடப்பட்ட முதியோருக்கு உணவளிக்கலாம். தங்களை யாராவது வந்து சந்திப்பார்களா, ஆறுதலாக சில வார்த்தைகள் சொல்வார்களா என்று முதியோர் இல்லங்களிலும், மருத்துவமனைகளிலும் சிறைகளிலும் ஏங்கும் மக்களைச் சந்திக்கலாம், இரத்த தானம், உடல் தானம் செய்து பிறருக்கு வாழ்வளிக்கலாம். இறந்தவர்களை அடக்கம் செய்ய இயலாமல் இருப்பவர்க்கு உதவலாம். மேலும், வாழ்வில் சந்திக்கும் சோதனைகள், துன்பங்களால் கடவுள் நம்பிக்கையை இழந்து வாழும் மக்களிடம் இறைநம்பிக்கையை எடுத்துச் சொல்லி அவர்களை ஊக்கப்படுத்தலாம். அவர்களோடு சேர்ந்து சமய நூல்களை வாசிக்கலாம்.

தவறு செய்யும் மனிதர்களை உடனடியாகத் தீர்ப்பிடாமல், அவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்த ஆதரவுக் கரம் நீட்டலாம். உன் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைக் கவனியாமல் உன் சகோதரன் கண்ணில் இருக்கும் துரும்பைப் பார்ப்பதேன்(மத்.7:5) என்ற இயேசுவின் சொற்களை நினைவுப்படுத்தி, நாம் பிறரைத் திருத்தும்போது நாம் நீதிமான்கள் என்ற எண்ணமின்றி செயல்படலாம். துன்புறுவோரைத் தேற்றுவதற்குத் தெரியாவிட்டால்கூட அவர்களுடன் இருப்பதே ஆறுதலாக இருக்கும் என்று உணர்ந்து செயல்படலாம். நமக்கெதிராகத் தவறு செய்பவர்களை மன்னிக்கலாம், மன்னிப்புக் கேட்கலாம்.

அன்பர்களே, இரக்கத்தின் யூபிலி ஆண்டில், ஏழைகள், ஒதுக்கப்பட்டவர், ஒடுக்கப்பட்டவர் இவர்கள் மீது பரிவு காட்டுதல் உட்பட நற்செயல்களை நாம் ஆற்ற வேண்டுமென அழைக்கப்படுகிறேம். இறைவனோடும், நமக்கு அடுத்திருப்பவரோடும் நமக்குள்ள உறவைப் புதுப்பிக்கவும், பழைய பாவ வாழ்விலிருந்து புதுவாழ்வுக்கு மனம் மாறவும்  இந்த யூபிலி ஆண்டு நம்மை அழைக்கிறது. நம்மோடு இறைவன் எப்போதும் உடனிருக்கிறார் என்ற ஆழமான நம்பிக்கை வாழ்வுக்கு நாம் திரும்ப வேண்டும். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் மனமாற்றம் பற்றியே பேசினார். “நான் ஏன் மனம் மாற வேண்டும்? இது நாத்திகர்களுக்கும் பாவிகளுக்கும் உரியது, நான் ஏற்கனவே நன்றாகத்தானே இருக்கிறேன், எனக்கு மனமாற்றம் அவசியமில்லை என்று நினைக்கலாம். ஆனால் நாம் சில தவறுகள் அல்லது முரண்பாடுகளால் துன்புறும்போது, நம் இதயத்தில் பகைமையின்றி செயல்படுகிறோமா அல்லது மன்னிப்புக் கேட்பவர்களை மன்னிக்கிறோமா? அழுவாரோடு உண்மையிலேயே அழுகின்றோமா? மகிழ்வாரோடு மகிழ்கின்றோமா? விசுவாசத்தை வெட்கப்படாமல் அறிவிக்கிறோமா? அன்பர்களே, நாம் மனம் மாற வேண்டும் என்று கேட்டுள்ளார் திருத்தந்தை. பழங்கால யூத மரபில் ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை யூபிலி ஆண்டு சிறப்பிக்கப்பட்டது. இஸ்ரேல் மக்கள் அனைவர் மத்தியிலும் சமத்துவத்தை நிலைநாட்டவும், தங்களின் சொத்துக்களையும், ஏன் தனிப்பட்ட சுதந்திரத்தையும் இழந்தவர்கள் மீண்டும் அதைப் பெறவும், அடிமைகளும் கைதிகளும் விடுதலை பெறவும் இவ்வாண்டு கொண்டாடப்பட்டது. கத்தோலிக்கத்தில் யூபிலி ஆண்டு எழுநூறு வருட வரலாற்றைக் கொண்டது. திருத்தந்தை 8ம் போனிபாஸ் அவர்கள், 1300ம் ஆண்டில் யூபிலி ஆண்டைத் தொடங்கி வைத்தார். நூறு ஆண்டுக்கு ஒருமுறை இது கொண்டாடப்படுமாறு இவர் விரும்பினார். ஆனால் ஒவ்வொரு தலைமுறையும் தனது வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த ஆண்டைச் சிறப்பிக்க வேண்டும் என்று சொல்லி, 1475ம் ஆண்டிலிருந்து 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை யூபிலி ஆண்டு கொண்டாடப்பட்டு வந்தது. இதுவரை 26 சாதாரண யூபிலி ஆண்டுகள் சிறப்பிக்கப்பட்டுள்ளன. 2000மாம் ஆண்டில் கடைசியாக இது நிகழ்ந்துள்ளது.

ஆயினும், 16ம் நூற்றாண்டில், சில குறிப்பிட்ட நிகழ்வை வைத்து சிறப்பு யூபிலி ஆண்டு அறிவிக்கும் பழக்கம் ஆரம்பமானது. மீட்பின் 1950ம் ஆண்டை முன்னிட்டு திருத்தந்தை 2ம் ஜான் பால் 1983ம் ஆண்டில் சிறப்பு யூபிலி ஆண்டை அறிவித்தார். இதே காரணத்திற்காக 1933ம் ஆண்டு சனவரி 6ம் தேதி திருத்தந்தை 11ம் பயஸ் அறிவித்தார். 20ம் நூற்றாண்டில் இரு சிறப்பு யூபிலி ஆண்டுகள் சிறப்பிக்கப்பட்டுள்ளன. 21ம் நூற்றாண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை அறிவித்துள்ளார். சிறப்பு யூபிலி ஆண்டுகள் சாதாரண யூபிலி ஆண்டுகளைப் பாதிப்பதில்லை. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையும் சேர்த்து இதுவரை கத்தோலிக்கத் திருஅவையில் 65 சிறப்பு யூபிலி ஆண்டுகள் இடம்பெற்றுள்ளன. முதல் சிறப்பு யூபிலி ஆண்டு 1585ம் ஆண்டு மே 25ம் தேதி திருத்தந்தை 5ம் சிக்ஸ்துஸ்(1585-1590)  அவர்களால் அறிவிக்கப்பட்டது. இவர் தனது பாப்பிறைப் பணியின் ஆரம்பமாக இதனை அறிவித்தார். கிறிஸ்தவர்கள் மத்தியில் அமைதியை ஊக்குவிக்கவும், திருஅவைத் தலைவர்களின் சிறப்புத் தேவைகளுக்குப் பதிலளிக்கவும், பொதுச் சங்கத்தின் வெற்றி, துருக்கிக்கு எதிரான மோதல், அன்னையின் அமல உற்பவக் கோட்பாட்டு அறிக்கையின் 50ம் ஆண்டு நிறைவு போன்ற வரலாற்றின் சிறப்பு தருணங்களைக் குறிக்கவும் சிறப்பு யூபிலி ஆண்டுகள் அறிவிக்கப்பட்டன.

இச்செவ்வாயன்று தொடங்கும் இரக்கத்தின் சிறப்பு ஆண்டில், நம் வாழ்வில் கடவுளின் இரக்கத்தை எந்த அளவிற்கு அனுபவிக்கிறோமா அந்த அளவுக்கு நாம் பிறரிடம் இரக்கமுள்ளவராக வாழ அழைக்கப்படுகிறோம். மொத்தத்தில், பிறரன்பின் பிம்பங்களாக, வாழும் அடையாளங்களாக வாழ நாம் அழைக்கப்படுகிறோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.