2015-12-07 15:45:00

புனிதக் கதவு திறக்கும் நிகழ்வில் முன்னாள் திருத்தந்தை


டிச.07,2015. அமல அன்னை விழாவாகிய டிசம்பர் 08, இச்செவ்வாய் காலையில் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயப் புனிதக் கதவைத் திறந்து வைத்து இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை ஆரம்பித்து வைப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்செவ்வாய் உரோம் நேரம் காலை 9.30 மணிக்கு, இந்திய நேரம் பிற்பகல் 2 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமாகும். 2ம் வத்திக்கான் பொதுச் சங்கம் நிறைவுற்றதன் 50ம் ஆண்டு நினைவாகவும் இந்த யூபிலி ஆண்டு இடம்பெறுகின்றது.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருப்பலி முடிந்து பசிலிக்கா பேராலயத்தின் புனிதக் கதவு திறக்கும் நிகழ்வில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கலந்துகொள்வார் என்று, திருப்பீட செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் அறிவித்தார்.

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் இவர்கள், இரண்டாயிரமாம் மாபெரும் யூபிலி ஆண்டைத் தொடங்கி வைத்தபோது வத்திக்கான் பசிலிக்கா பேராலயப் புனிதக் கதவைத் திறந்து வைத்தார். அதன்பின்னர் அக்கதவு இச்செவ்வாய் காலையில் திறக்கப்படவுள்ளது.  

கத்தோலிக்கத் திருஅவையில் யூபிலி ஆண்டு 700 வருட வரலாற்றைக் கொண்டது. 1300ம் ஆண்டில் திருத்தந்தை 8ம் போனிபாஸ் அவர்கள், யூபிலி ஆண்டைத் தொடங்கி வைத்தார். “உங்கள் வானகத் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல்...(லூக்.6:36)” என்ற தலைப்பில் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு சிறப்பிக்கப்படுகின்றது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.