2015-12-07 15:14:00

திருத்தந்தை : இறையழைத்தல்கள் திருஅவைக்குள் பிறக்கின்றன


டிச.07,2015. இறையழைத்தல்கள், திருஅவைக்குள் பிறந்து, திருஅவைக்குள் வளர்ந்து, திருஅவையால் பேணி பாதுகாக்கப்படுகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

53வது உலக இறையழைத்தல் நாளுக்கென வெளியிட்டுள்ள செய்தியில், இறையழைத்தல்களைப் பெறும் ஒவ்வொருவரும், அதைப் பெறும் அந்நேரத்திலிருந்து தாங்கள் அகிலத் திருஅவைக்கும், உலகுக்கும் பணியாற்ற அழைக்கப்படுகின்றனர் என்ற உணர்வில் வளருமாறு கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருமுழுக்குப் பெற்றுள்ள அனைவரும், தாங்கள் திருஅவைக்குச் சொந்தமானவர்கள் என்ற மகிழ்வை இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் அனுபவிக்கவும், ஒவ்வொரு தனிப்பட்ட அழைப்பைப் போன்று கிறிஸ்தவ அழைப்பும் இறைமக்களிடமிருந்து பிறக்கின்றது மற்றும் இவ்வழைப்பு, இறை இரக்கத்தின் கொடை என்பதைக் கண்டுணரவும் வேண்டுமெனவும் கூறியுள்ளார் திருத்தந்தை.

பல்வேறு சபைகளுக்கு இறையழைப்பைப் பெற்றுள்ள இளையோர், தங்களின் பயிற்சி காலத்தில் திருஅவைக் குழுமத்தின் அறிவில் வளருமாறு கேட்டுள்ள திருத்தந்தை, மனமாற்றமும் இறையழைப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து விசுவாசிகளும் இறையழைத்தல்களின் திருஅவைக் கூறைப் பாராட்டுமாறும், இதனால் விசுவாசிகள் சமூகம், அன்னை மரியாவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, தூய ஆவியாரின் கொடையை வரவேற்கும் தாயின் உதரம் போன்று மாறுமாறும் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையின் தாய்மை, இறையழைத்தல்களுக்காகத் தொடர்ந்து செபிப்பதிலும், இறையழைப்பைப் பெறுபவர்களோடு உடன்சென்று அவர்களைப் பயிற்றுவிப்பதிலும் குருத்துவ மற்றும் துறவு வாழ்வுக்கு நபர்களைக் கவனமுடன் தேர்ந்தெடுப்பதிலும் வெளிப்படுத்தப்படுகின்றது என்றும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

திருஅவையின் தாய்மை, இறையழைத்தலைப் பெற்றுள்ள அனைவருக்கும் தொடர்ந்து ஆதரவு அளிப்பதிலும் வெளிப்படுத்தப்படுகின்றது என்றும், இறையழைத்தலைப் பெற்றுள்ள அனைவரும் திருஅவைக்குச் சொந்தமானவர்கள் என்ற ஆழமான உணர்வில் வாழவும், மேய்ப்பர்களை தூய ஆவியார் திடப்படுத்தவும் நாம் செபிக்க வேண்டுமென்றும் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையில் ஒவ்வோர் அழைப்பும் இயேசுவின் பரிவன்புப் பார்வையில் ஆரம்பமாகின்றது என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.

2016ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி சிறப்பிக்கப்படும், 53வது உலக இறையழைத்தல் நாளுக்கென திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தி, “திருஅவை, இறையழைத்தல்களின் அன்னை” என்ற தலைப்பைக் கொண்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.