2015-12-07 15:48:00

கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பு யூபிலி ஆண்டுகள்


டிச.07,2015. பழங்கால யூத மரபில் ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை யூபிலி ஆண்டு சிறப்பிக்கப்பட்டது. இஸ்ரேல் மக்கள் அனைவர் மத்தியிலும் சமத்துவத்தை நிலைநாட்டவும், தங்களின் சொத்துக்களையும், ஏன் தனிப்பட்ட சுதந்திரத்தையும் இழந்தவர்கள் மீண்டும் அதைப் பெறவும், அடிமைகளும் கைதிகளும் விடுதலை பெறவும் இவ்வாண்டு கொண்டாடப்பட்டது. கத்தோலிக்கத்தில் யூபிலி ஆண்டு எழுநூறு வருட வரலாற்றைக் கொண்டது. திருத்தந்தை 8ம் போனிபாஸ் அவர்கள், 1300ம் ஆண்டில் யூபிலி ஆண்டைத் தொடங்கி வைத்தார். நூறு ஆண்டுக்கு ஒருமுறை இது கொண்டாடப்படுமாறு இவர் விரும்பினார். ஆனால் ஒவ்வொரு தலைமுறையும் தனது வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த ஆண்டைச் சிறப்பிக்க வேண்டும் என்று சொல்லி, 1475ம் ஆண்டிலிருந்து 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை யூபிலி ஆண்டு கொண்டாடப்பட்டு வந்தது. இதுவரை 26 சாதாரண யூபிலி ஆண்டுகள் சிறப்பிக்கப்பட்டுள்ளன. 2000மாம் ஆண்டில் கடைசியாக இது நிகழ்ந்துள்ளது.

ஆயினும், 16ம் நூற்றாண்டில், சில குறிப்பிட்ட நிகழ்வை வைத்து சிறப்பு யூபிலி ஆண்டு அறிவிக்கும் பழக்கம் ஆரம்பமானது. மீட்பின் 1950ம் ஆண்டை முன்னிட்டு திருத்தந்தை 2ம் ஜான் பால் 1983ம் ஆண்டில் சிறப்பு யூபிலி ஆண்டை அறிவித்தார். இதே காரணத்திற்காக 1933ம் ஆண்டு சனவரி 6ம் தேதி திருத்தந்தை 11ம் பயஸ் அறிவித்தார். 20ம் நூற்றாண்டில் இரு சிறப்பு யூபிலி ஆண்டுகள் சிறப்பிக்கப்பட்டுள்ளன. 21ம் நூற்றாண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை அறிவித்துள்ளார். சிறப்பு யூபிலி ஆண்டுகள் சாதாரண யூபிலி ஆண்டுகளைப் பாதிப்பதில்லை. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையும் சேர்த்து இதுவரை கத்தோலிக்கத் திருஅவையில் 65 சிறப்பு யூபிலி ஆண்டுகள் இடம்பெற்றுள்ளன. முதல் சிறப்பு யூபிலி ஆண்டு 1585ம் ஆண்டு மே 25ம் தேதி திருத்தந்தை 5ம் சிக்ஸ்துஸ்(1585-1590)  அவர்களால் அறிவிக்கப்பட்டது. இவர் தனது பாப்பிறைப் பணியின் ஆரம்பமாக இதனை அறிவித்தார். கிறிஸ்தவர்கள் மத்தியில் அமைதியை ஊக்குவிக்கவும், திருஅவைத் தலைவர்களின் சிறப்புத் தேவைகளுக்குப் பதிலளிக்கவும், பொதுச் சங்கத்தின் வெற்றி, துருக்கிக்கு எதிரான மோதல், அன்னையின் அமல உற்பவக் கோட்பாட்டு அறிக்கையின் 50ம் ஆண்டு நிறைவு போன்ற வரலாற்றின் சிறப்பு தருணங்களைக் குறிக்கவும் சிறப்பு யூபிலி ஆண்டுகள் அறிவிக்கப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.