2015-12-05 15:11:00

தொழில்நுட்ப ஆதிக்க உலகில் கருணையைக் காண முடியவில்லை


டிச.05,2015. வரலாற்றில் எந்தக் காலத்திலும் இருந்ததைவிட இக்காலத்தில் இரக்கப் பண்பு மிக அதிகமாகத் தேவைப்படுகின்றது என்று சிங்கப்பூர் தலத்திருஅவைத் தலைவர் கூறியுள்ளார்.

டிசம்பர் 08, வருகிற செவ்வாயன்று ஆரம்பிக்கும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டுக்கென அறிக்கை வெளியிட்டுள்ள சிங்கப்பூர் பேராயர் William Goh Seng Chye அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.

அறிவியலும் தொழில்நுட்பமும் ஆதிக்கம் செலுத்துகின்ற ஓர் உலகில் இரக்கப் பண்புக்கு இடமே இல்லை என்றும், இந்த இரக்கப் பண்பு இல்லாமல் இருப்பதை,  மனித வாழ்வும், குடியிருப்புகளும் வன்முறையில் அழிக்கப்படுவதில் தெளிவாகக் காண முடிகின்றது என்றும் கூறியுள்ளார் பேராயர் William Goh.

இந்த அழிவுச் செயல்கள், நீதியின் பெயரில் அடிக்கடி நியாயப்படுத்தப்படுகின்றன என்றும், பல பயங்கரவாதச் செயல்கள் கடவுள் மற்றும் அன்பின் பெயரில் நடத்தப்படுகின்றன என்றும் குறை கூறியுள்ளார் பேராயர் William Goh.

இரக்கம் என்ற வெளிவேடத்தில், கருக்கலைப்புகள் செய்வதற்கு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன, வயதானவர்கள், தனிமை மற்றும் வேதனையை அனுபவிக்காதவண்ணம் காருண்யக் கொலை ஊக்கப்படுத்தப்படுகின்றது என்றுரைத்துள்ள சிங்கப்பூர் பேராயர், இரக்கத்தின் யூபிலி ஆண்டின் ஒளியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தும் இரக்கத்தின் நற்செய்தியை மையப்படுத்தி வாழ்வோம் என்று விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிங்கப்பூரில் கத்தோலிக்கர் 5 விழுக்காடு மற்றும் புத்த மதத்தினர் 43 விழுக்காடாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.