2015-12-05 14:07:00

திருவருகைக்காலம் 2ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


கனத்த இதயங்களுடன் கடவுளை நாடி வந்துள்ளோம். கடந்த இருபது நாட்களுக்கும் மேலாகப் பெய்துவரும் கன மழையாலும், வெள்ளத்தாலும் தமிழக மக்கள் அடைந்துவரும் துயரங்கள், குறிப்பாக, சென்னை வாழ் மக்கள் அனுபவித்துவரும் துன்பங்கள் நம்மை நிலைகுலையச் செய்துள்ளன. இத்துயரங்களுக்குக் காரணம், இயற்கையின் சீற்றம் என்று ஒரு பக்கம் சொன்னாலும், மனிதர்களின் மனசாட்சியற்ற சுயநலமும், பேராசையும், இத்துன்பத்தை பல மடங்காகக் கூட்டியுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஏரிகள் வீட்டு மனைகளாகவும், மழை வடிகால் பாதைகள், குப்பை மேடுகளாகவும் மாறியதே, சென்னை பெருநகர் மக்களின் துன்பங்களுக்கு முக்கியக் காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஒவ்வொரு முறையும் இயற்கைப் பேரிடர் மனிதர்களைச் சந்திக்கும்போது, அதன் விளைவுகளை இன்னும் கூட்டி, பெரும் ஆபத்தாக மாற்றுவது, மனிதரின் பேராசையே என்ற கசப்பான உண்மையும் உணரப்படுகிறது. சென்னை மட்டுமல்ல, 2005ம் ஆண்டு மும்பை நகரமும், 2014ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலமும் வெள்ளத்தில் மூழ்கியபோது, இதையொத்த உண்மைகள் வெளிவந்தன. இப்போது, பாரிஸ் மாநகரில், உலகத் தலைவர்கள் கூடி, காலநிலை மாற்றம் குறித்து பேசும்போதும், மனிதர்களின் பேராசையால் விளைந்துள்ள இயற்கைச் சீரழிவு என்ற உண்மை, நம்மை முகத்தில் அறைகிறது.

சுயநலமும், பேராசையும் மனித சமுதாயத்தில் புரையோடிப்போன புண்ணாக மாறி, உள்ளவர், இல்லாதவர் என்ற பாகுபாட்டை வெகு ஆழமாகப் பதித்துவிட்டன. மனிதர்களின் பேராசையால் ஏனைய மனிதர்கள் துன்புறுவது போதாதென்று, இப்போது, பூமிக்கோளமும், துன்புறுகின்றது. மனிதரின் கட்டுக்கடங்காத பேராசை வெறியால், காலநிலையில் ஆபத்தான அளவு வெப்பம் உயர்ந்து, அண்மையக் காலங்களில், இயற்கைப் பேரிடர்கள், அடிக்கடி, அதிக சக்தியுடன் நிகழ்கின்றன. இந்தப் பேரிடர்களில் தங்கள் வாழ்வையும், வாழ்வாதரங்களையும் மீண்டும், மீண்டும் இழப்பது, சுயநலச் சுறாமீன்கள் அல்ல, வறியோரே!

காலநிலை உச்சி மாநாட்டில், மக்கள் நலனை மையப்படுத்திய துணிவான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று மன்றாடுவோம். சென்னையையும், தமிழ்நாட்டையும் நிலைகுலையச் செய்துள்ள மழையும், வெள்ளமும் ஓயவேண்டும் என்று இறைவனை வேண்டும் அதே நேரத்தில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில், நம் அரசியல் தலைவர்களின் மனசாட்சியை இறைவன் தட்டி எழுப்பவேண்டும் என்றும் இறைஞ்சுவோம்.

மனசாட்சியற்ற தலைவர்களும், பேராசை பிடித்த செல்வந்தர்களும் இயற்கைச் சீரழிவுகளுக்கும், சமுதாய அவலங்களுக்கும் காரணம் என்று நாம் குற்றம் சுமத்திவிட்டு ஒதுங்கிவிட முடியாது. எப்போதெல்லாம் நம் சுட்டுவிரல் அடுத்தவரை நோக்கி நீள்கிறதோ, அப்போதெல்லாம் மற்ற விரல்கள் நம்மையும் குத்திக்காட்டுகின்றன என்பதை உணர வேண்டும். இன்றையச் சமுதாயச் சீரழிவுக்கு நாமும் ஏதோ ஒருவகையில் காரணமாக இருந்திருக்கிறோம் என்பதை, பணிவுடன் ஏற்றுக்கொண்டு, நம் வாழ்வுப் பாதையைச் சீராக்க முயல்வோம்.. பாதையைச் செம்மையாக்குங்கள், மேடுபள்ளங்களைச் சமமாக்குங்கள், என்ற எச்சரிக்கை இன்றைய நற்செய்தியில் ஒலிக்கிறது. நம்மில் ஒருவராகப் பிறக்கவரும் இறைவனை, தகுந்த முறையில் வரவேற்க நமக்கு வழங்கப்பட்டுள்ள அருள் நிறை காலம், திருவருகைக் காலம்.

கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாட நாம் எடுக்கும் முயற்சிகளைவிட, பல நூறு மடங்கு அதிக முயற்சிகள் எடுத்துவருகிறது, வர்த்தக உலகம். கிறிஸ்மஸ் விழாவுக்கென்று, கடைவீதியில், பொருள்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருந்த ஓர் இளம் தாய் நம் திருவருகைக் காலச் சிந்தனைகளை ஆரம்பித்து வைத்தார். அவரது ஐந்து வயது மகன், ஒரு கடையில் அலங்காரமாய் வைக்கப்பட்டிருந்த குழந்தை இயேசுவைக் காண அம்மாவை அழைத்தபோது, அந்த இளம் தாய், "அதுக்கெல்லாம் இப்ப நேரமில்ல" என்று சொன்னது நமக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று நாம் சிந்தித்தோம். திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று, நாம் மீண்டும் கடைவீதிக்கு வந்துள்ளோம். 'நேரமில்ல' என்று சென்ற வாரம் சிந்தித்ததுபோல, 'நேரம் வந்துவிட்டது' என்று இன்று சிந்திக்க வந்துள்ளோம்.

கிறிஸ்மஸ் அலங்காரங்களுடன் மின்னும் ஒரு கடைவீதியில் நாம் நடந்து செல்வதாகக் கற்பனை செய்துகொள்வோம். அங்கே... "இறுதிநாள் நெருங்கியுள்ளது… ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்" என்ற குரல் ஒரு பக்கம் ஒலிக்கிறது. "இன்றே இறுதிநாள்... தள்ளுபடி விற்பனையில் பொருள்களை அள்ளிச் செல்லுங்கள்" என்று வேறொரு குரல் மறுபக்கம் ஒலிக்கிறது. இவ்விரு குரல்களுக்கும் போட்டி வந்தால், எந்தக் குரல் வெல்லும் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். தள்ளுபடி விற்பனையைப்பற்றி குரல் வரும் திசை நோக்கி, முட்டி, மோதிக்கொண்டு, கூட்டம் அலைமோதும்.

பெருநகரங்களில், கடைவீதிகள், அடுக்குமாடி கட்டிடங்களாய் மாறி உள்ளன. இக்கடைவீதிகளுக்கு Shopping Mall என்று பெயரிட்டிருக்கிறோம். அமெரிக்காவின் Shopping Mall ஒன்றில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் ஒரு நிகழ்ச்சி இது:

அந்த Mallஇல் கிறிஸ்மஸ் வியாபாரம் வெற்றிகரமாக நடந்துகொண்டிருந்தது. பொருட்கள் வாங்கிக் களைத்துப் போனவர்கள் இளைப்பாறுவதற்கு அந்த Mallன் ஒரு பகுதியில் தனியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவ்விடத்தில் அமர்ந்திருந்த ஒருவர், பொருள்கள் வாங்கியவர்களிடமும், அல்லது, வாங்க வந்திருப்பவர்களிடமும் வலியச்சென்று பேச ஆரம்பித்தார். அவர் மிகவும் கண்ணியமாக, கனிவாகப் பேசியதால், அவர் சொன்னதை மக்கள் கேட்டனர். அவர் அங்கு அமர்ந்திருந்தவர்களிடம் ஒரு சில கேள்விகள் மட்டும் கேட்டார்: "ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள்? கிறிஸ்மசுக்கு இத்தனை பரிசுகள் வாங்கத்தான் வேண்டுமா? நீங்கள் செலவு செய்யும் பணத்தில் பாதியை ஏழைகளோடு பகிர்ந்துகொண்டால், உங்கள் கிறிஸ்மஸ் இன்னும் மகிழ்வாக இருக்காதா? நீங்கள் பல நாட்களாக மன்னிக்க முடியாமல் கஷ்டப்படும் ஒருவரைத் தேடிச்சென்று, அவருடன் ஒப்புரவனால், அதைவிட சிறந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டம் இருக்க முடியுமா? இந்தக் கடைகளில் காணப்படும் கிறிஸ்மஸ் மகிழ்ச்சி உங்களுக்குச் செயற்கையாக தெரியவில்லையா?" என்று அவர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையில் கேள்விகளை எழுப்பி வந்தார்.

அவர் சொன்னதில் இருந்த உண்மைகளை உணர்ந்த பலரும், தலையசைத்தனர். பொருள்கள் வாங்க வந்த ஒரு சிலர் மீண்டும் திரும்பிச்சென்றனர். வேறு சிலர் தாங்கள் புதுப்பிக்க விரும்பிய உறவுகளுக்காக பரிசுப் பொருள்கள் வாங்கிச்சென்றனர். இன்னும் ஒரு சிலர் அந்த Mallஇல் நேரத்தைச் செலவிடுவதற்குப் பதில், அருகிலிருந்த ஒரு கோவிலுக்குச் சென்று அமைதியாக நேரத்தைச் செலவிட்டனர்.

கடைகளின் உரிமையாளர்கள் இந்த மனிதரைப் பற்றிக் கேள்விப்பட்டனர். Mallன் காவலாளிகளிடம் சொல்லி, அந்த மனிதர் மீண்டும் Mallக்குள் நுழையாதவாறு தடுத்தனர். அந்த மனிதரை ஏன் அவர்கள் தடைசெய்தனர் என்ற கேள்வி எழுந்தபோது, "அவர் நம் கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்" என்று பதில் சொன்னார்கள். "அவர் எங்கள் கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைக் கெடுத்தார்" என்று அந்த வியாபாரிகள் தங்களைப்பற்றி மட்டும் சொல்லாமல், மக்களையும் தங்களோடு இணைத்துக்கொண்டு, "அவர் நம் கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்" என்று நமக்கும் சேர்ந்து பதில் சொன்னார்கள். இது, அவர்கள் படித்து, பழகி வைத்துள்ள வியாபாரத் தந்திரம். நமக்கும் சேர்த்து சிந்திப்பது, முடிவெடுப்பது என்று பல வழிகளிலும் வியாபாரிகள் நம்மை ஒரு மாய வலையில் கட்டிப்போட்டு வைத்துள்ளனர். வியாபாரிகள் விரித்த வலைகளில் மக்கள் சிக்காமல் இருக்க, Mallஇல் அமர்ந்து கேள்விகள் எழுப்பிய அவர், கிறிஸ்மஸ் மகிழ்ச்சியை கெடுத்தாரா, அல்லது அந்த மகிழ்ச்சிக்குப் புதியத் தெளிவுகளை தந்தாரா என்பது நாம் சிந்திக்கவேண்டிய கேள்வி.

கிறிஸ்மஸ் மகிழ்ச்சி என்றால் என்ன, இவ்விழாவை எவ்விதம் கொண்டாடுவது என்ற கேள்விகளுக்கு வியாபாரிகள் 'ரெடிமேட்' பதில்களை வைத்திருக்கின்றனர். அந்தப் பதில்களை, எண்ணங்களை நம்மீது திணிக்க முயன்று, வெற்றியும் பெறுகின்றனர். வியாபாரிகள் தயாரித்து வைத்திருக்கும் 'ரெடிமேட்' எண்ணங்களுக்குப் பின்னணியில் அவர்களது சுயநலம் ஒளிந்திருப்பதை எளிதில் உணரலாம். ஆனால், Mallக்கு வந்த மக்களிடம் கேள்விகள் எழுப்பிய மனிதரோ, எவ்வித சுயநலமும் இல்லாமல், கிறிஸ்மஸ் விழா இன்னும் அர்த்தமுள்ள வகையில் கொண்டாடப்படவேண்டும் என்ற எண்ணத்தில், தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். Shopping Mall என்ற மாய வலையில் சிக்கியிருந்த மனிதர்களை விழித்தெழச் செய்த அந்த மனிதர், பல வழிகளில் திருமுழுக்கு யோவானை நமக்கு நினைவுபடுத்துகிறார்.

திருமுழுக்கு யோவான் நம் நகரங்களில் உள்ள கடைவீதிகளுக்கு இன்று வந்தால், மனதைப் பாதிக்கும் கேள்விகள் எழுப்பியிருப்பார். திருமுழுக்கு யோவான், ஒரு தீப்பிழம்பாக இருந்ததால், இன்னும் ஒரு படி மேலேச் சென்று, அந்த வியாபாரிகளையும் தங்கள் வழியிலிருந்து மாறச்சொல்லி சவால் விட்டிருப்பார்.

சுயநலக் கலப்படம் எதுவும் இல்லாமல், அந்த Mall மனிதரோ, அல்லது திருமுழுக்கு யோவானோ கிறிஸ்மஸ் என்றால் என்ன, அதை எப்படிக் கொண்டாடுவது என்று சொல்லித்தருவதைக் கேட்கப் போகிறோமா? அல்லது, சுயநல இலாபங்களுக்காக நமது விழாக்கள் மீது வேறுபட்ட அர்த்தங்களைத் திணிக்கும் வியாபாரிகள் சொல்லித் தருவதைக் கேட்கப் போகிறோமா? "இறுதிநாள் நெருங்கியுள்ளது… ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்." என்று திருமுழுக்கு யோவான் எழுப்பும் குரலைக் கேட்கப் போகிறோமா? அல்லது, "இன்றே கடைசி நாள்... தள்ளுபடி விற்பனையில் பொருள்களை அள்ளிச் செல்லுங்கள்." என்று வியாபாரிகள் எழுப்பும் குரலைக் கேட்கப் போகிறோமா? 

வியாபாரிகளும், விளம்பரதாரர்களும் ஒவ்வொரு திருவிழாவுக்கும் தயாரிக்கும் ஆர்வத்தில் நூறில் ஒரு பங்கு, நாம் ஆன்மீக வழிகளில் திருநாட்களுக்கு தயாரிக்கும் ஆர்வமாக மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆன்மீக உலகம் கூறும் தயாரிப்பு என்ன? நாம் எதிர்நோக்கியிருக்கும் இந்த கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு என்ன வகையில் தயாரிக்கலாம்? இந்தக் கேள்விகளுக்கு இன்றைய நற்செய்தி வரிகள் விடைபகர்கின்றன. இறைவாக்கினர் எசாயா இன்றைய நற்செய்தியின் வழியாக நம் அனைவருக்கும் விடுக்கும் அறைகூவல் இதுதான்:

லூக்கா நற்செய்தி 3: 4-6

“பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்; பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.”

தற்பெருமையில் பூரித்துப்போய், தலைகனம் மிகுந்து வாழும்போது உள்ளத்தில் மலைகள் தோன்றும். துன்பத்தைக் கண்டு நொறுங்கிப் போகும்போது, பள்ளங்கள்,  பள்ளத்தாக்குகள் உருவாகும். இந்த மலைகளைத் தாழ்த்தி, பள்ளங்களை நிரப்புவதற்குத் தேவையான ஆயுதங்கள் எங்கே? தேடி எங்கும் போகவேண்டாம். அவை நம்மிடமே உள்ளன. ஒருவேளை, அவற்றை அதிகம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டதால், தூசி படிந்து, துரு பிடித்துப் போயிருக்கலாம். அந்த ஆயுதங்கள் எவை? தாழ்ச்சி, நம்பிக்கை... தாழ்ச்சி, நம்பிக்கை இவற்றைக்கொண்டு மனதை பண்படுத்துவோம். இறைவன் இந்தப் பாதையில் வருவார். நம் மனதில் தங்குவார்.

இறுதியாக, டிசம்பர் 8, வருகிற செவ்வாய், அமல அன்னைத் திருநாளன்று, நாம் இரக்கத்தின் யூபிலி ஆண்டினைத் துவங்குகிறோம். அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பேதுரு பசிலிக்காவில் புனிதக் கதவுகளைத் திறக்கும்போது, இறை பிரசன்னத்திலிருந்து வெள்ளமாகப் பெருகிவரும் இரக்கம், இரத்தக்கறை படிந்த இவ்வுலகைக் கழுவவேண்டும் என்று உருக்கமாக மன்றாடுவோம். இரக்கத்தின் யூபிலி ஆண்டு முழுவதும், மனிதக் குடும்பம், அன்பு, பரிவு ஆகிய உணர்வுகளால் மென்மையடைந்து,  மேன்மையடைய வேண்டும் என்று இறைவனை இறைஞ்சுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.