2015-12-05 15:00:00

திருத்தந்தை கத்தோலிக்கப் பெற்றோரிடம்:பாலங்களைக் கட்டுங்கள்


டிச.05,2015. உண்மையான மனிதத்தைக் கொண்ட முழுமையான ஒரு மனித சமுதாயத்தை அமைப்பதற்கு கல்வியைப் பயன்படுத்துமாறு கத்தோலிக்கப் பெற்றோரிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கத்தோலிக்கப் பள்ளி பெற்றோர் கழகத்தின்(AGESC) நாற்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அக்கழகத்தின் 420 பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கப் பள்ளிகளில் எல்லாரும் வரவேற்கப்பட வேண்டும் என்று கூறினார்.

பிள்ளைகளுக்குக் கல்வி வழங்குவதில் பெற்றோரின் கடமையையும் வலியுறுத்திய  திருத்தந்தை, பிள்ளைகளுக்குக் கல்வி வழங்குவதில் பெற்றோர் முதலும் முக்கியமுமான, தவிர்க்க இயலாத கடமையைக் கொண்டிருக்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

கல்வி, கத்தோலிக்க முறையில் கற்பிக்கப்படுவதற்கு, நேர்மறை வழியில் உதவுகின்ற கடமை பெற்றோர்க்கு உள்ளது என்றும், பெற்றோரும், கல்வியாளர்களும், மனித மற்றும் கிறிஸ்தவ விழுமியங்களை ஒருபோதும் விற்றுவிடக் கூடாது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு தனது குடும்பத்தில் ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார் என்ற லூக்கா(2,52) நற்செய்திப் பகுதியைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்களை எனது செபத்தில் நினைவு கூர்கிறேன், எனக்காகச் செபிப்பதற்கு மறக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.