2015-12-05 15:29:00

கத்தோலிக்க அருள்பணியாளர், இமாம் இணைந்து அமைதிப் பணி


டிச.05,2015. பாகிஸ்தானில் கிறிஸ்தவ சிறுபான்மை மக்களை அடக்குமுறையிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்தில், ஒரு கத்தோலிக்க அருள்பணியாளரும், இஸ்லாம் மத குரு ஒருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

தொமினிக்கன் சபை அருள்பணியாளர் James Channan, லாகூர் Badshahi மசூதி இமாம் Syed Muhammad Abdul Khabir Azad ஆகிய இருவரும், லாகூர் அமைதி மையத்தில், மதங்களிடையே அமைதியைக் கொணரப் பணியாற்றி வருகின்றனர்.

பாகிஸ்தானில், குண்டு வெடிப்புகளும், பிற வன்முறைகளும் இடம்பெற்றதையடுத்து இப்பணியில் இறங்கியுள்ள இவ்விருவரும், வன்முறை இடம்பெறும் இடங்களுக்கு உடனடியாகச் சென்று அமைதிப் பணியாற்றுகின்றனர்.

இவ்வாண்டில் லாகூரின் Youhanabadல் கத்தோலிக்க மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபை ஆலயங்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் நடந்த இடத்திற்கு இவ்விருவரும் சென்றுள்ளனர்.

இமாம் Azad அவர்கள், மசூதிக்கு முன்பாக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு அழைப்பு விடுக்கும் போராட்டத்தையும் நடத்தியுள்ளார் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.