2015-12-05 15:27:00

இரக்கத்தின் யூபிலி ஆண்டில் சான்றிதழ்


டிச.04,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஒவ்வொரு மாதத்தின் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையில், இரக்கச் செயல்களோடு தொடர்புடைய ஓர் அடையாள நிகழ்வில் ஈடுபடுவார் என்று பேராயர் ரீனோ பிசிக்கெல்லா அவர்கள் அறிவித்தார்.

டிசம்பர் 18ம் தேதி உரோம் மறைமாவட்ட காரித்தாஸ் நடத்தும் புகலிடத்திற்கு திருத்தந்தை செல்வது இந்த அடையாள நிகழ்வில் ஒன்று, இது முற்றிலும் தனிப்பட்ட நிகழ்வாக இருக்கும் என்றும் தெரிவித்தார் பேராயர் பிசிக்கெல்லா.

வருகிற செவ்வாயன்று தொடங்கும் இரக்கத்தின் யூபிலி ஆண்டு நிகழ்வுகள் மற்றும் புதிய முயற்சிகள் குறித்து இவ்வெள்ளியன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் விளக்கிய, நற்செய்தியின் புதியவழி அறிவிப்பு திருப்பீட அவையின் தலைவர் பேராயர் பிசிக்கெல்லா அவர்கள், இவை போன்ற மேலும் பல தகவல்களையும் அறிவித்தார்.   

- இந்த யூபிலி ஆண்டு நிறைவடையும் 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி வரை, ஒவ்வொரு நாள் மாலையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்திலுள்ள தூய பேதுரு திருவுருவத்திற்கு முன்பாக செபமாலை பக்தி முயற்சி இடம்பெறும், பல குழுக்கள் இச்செபத்தை வழிநடத்தும்.

- திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் பொது மறைக்கல்வியுரை தவிர, ஒவ்வொரு மாதத்தின் ஒரு சனிக்கிழமையில் சிறப்பு பொது மறைக்கல்வியுரை இடம்பெறும்.

- வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவிலும், உரோமையின் பிற ஆலயங்களிலும், சக்கர நாற்காலிகள் வசதிகளுடன் சிறப்பு ஒப்புரவு அருளடையாள வசதிகள் இருக்கும், பார்வையிழந்த மற்றும் பேச்சுத்திறன் இழந்தவர்கள் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவதற்கு உதவியாக, ஒலி, காணொளி மற்றும் புத்தகங்களும் கிடைக்கும்.

- வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவின் புனிதக் கதவு வழியாகச் செல்ல விரும்புவர்கள் மற்றும் உரோமையில் இடம்பெறும் பெரிய யூபிலி நிகழ்வுகளில் கலந்துகொள்ள விரும்பும் திருப்பயணிகளுக்கு இலவச அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும், இவற்றை இணையதளத்தில் www.im.va முகவரியிலும், Via della Conciliazione 7லுள்ள தகவல் மையத்திலும் பெறலாம்.

- உரோமைக்கு வருகின்ற, குறிப்பாக நடந்து வருகின்ற திருப்பயணிகளுக்கு, தகவல் மையத்திலிருந்து "testimonium" என்ற அதிகாரப்பூர்வச் சான்றிதழ் கிடைக்கும். 

- இரக்கத்தின் யூபிலி ஆண்டு இலச்சினை முத்திரைகள் பதிக்கப்பட்ட பொருள்களை நாடினால், உணவு மற்றும் தங்குமிடங்களில் நியாயமான விலைகள் கொண்ட பொருள்கள் கிடைக்கும்.

- இந்த யூபிலி ஆண்டில் உலகின் அனைத்து ஆயர்களும் புனிதக் கதவைத் திறக்கும் மற்றும் அக்கதவை மூடும் திருப்பலிகளில் திருத்தந்தையின் ஆசிரை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

- எண்ணூறுக்கு மேற்பட்ட அருள்பணியாளர்கள் இரக்கத்தின் மறைப்பணியாளர்கள் என்று திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், உலகின் பல்வேறு பாகங்களுக்குச் சென்று இரக்கத்தின் போதகர்கள் மற்றும் ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுபவர்களாகச் செயல்படுவர். கருக்கலைப்பு பாவத்திற்குரிய தண்டனைகளை நீக்குவதற்கு அனைத்துக் கத்தோலிக்க குருக்களுக்கும் இப்புனித ஆண்டில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, அதேநேரம், தண்டனைகள் வழங்குவதற்குத் திருப்பீடத்திற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள பாவங்களுக்குரிய தண்டனையை அகற்றுவதற்கு இரக்கத்தின் மறைப்பணியாளர்க்கு சிறப்பு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.  

மேலும், இந்த யூபிலி ஆண்டு பற்றி விளக்கிய அத்திருப்பீட அவைச் செயலர் பேராயர் Jose Octavio Ruiz Arenas அவர்கள், இந்த யூபிலி ஆண்டு மனமாற்றத்தின் திருப்பயணமாகவும், துய பேதுரு கல்லறைக்கு முன்னர் ஒருவர் தனது விசுவாசத்தைப் புதுப்பிப்பதாகவும் இருக்கும் என்று கூறினார்.

2015ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி ஆரம்பிக்கும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.