2015-12-04 15:51:00

டிச.13ல் எல்லா மறைமாவட்டங்களிலும் புனிதக் கதவுகள் திறப்பு


டிச.04,2015. யூபிலி ஆண்டுகள் வரலாற்றில் முதன்முறையாக, உலகின் அனைத்து மறைமாவட்டங்களிலும் புனிதக் கதவுகள் திறக்கப்படும், இந்நிகழ்வு, டிசம்பர் 13, ஞாயிறன்று இடம்பெறும் என்று பேராயர் ரீனோ பிசிக்கெல்லா அவர்கள் அறிவித்தார்.

வருகிற செவ்வாயன்று ஆரம்பிக்கும் இரக்கத்தின் யூபிலி ஆண்டு நிகழ்வுகள் குறித்து இவ்வெள்ளியன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் விளக்கிய, நற்செய்தியின் புதியவழி அறிவிப்பு திருப்பீட அவையின் தலைவர் பேராயர் பிசிக்கெல்லா அவர்கள் இதனை அறிவித்தார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு தலத்திருஅவைகளில் முக்கியமாக சிறப்பிக்கப்பட வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விரும்பினார், அதனாலேயே திருத்தந்தை, மத்திய ஆப்ரிக்க குடியரசின் பாங்கி நகர் பேராலயப் புனிதக் கதவை, கடந்த ஞாயிறன்று (நவம்பர் 29) திறந்து வைத்தார் என்றும் கூறினார் பேராயர் பிசிக்கெல்லா.

இரக்கத்தின் யூபிலி ஆண்டு நிகழ்வுகள் குறித்த தகவல்களை அறிவதற்கும், நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு வழங்கப்படும் அனுமதிச் சீட்டுகளைப் பெறுவதற்கும் உரோம் Conciliazione சாலையில், இலக்கம் 7ல் வசதி செய்யப்பட்டுள்ளது, இந்த அலுவலகம் எல்லா நாள்களிலும் காலை 7.30 முதல் மாலை 6.30 வரை இயங்கும் என்றும் பேராயர் தெரிவித்தார்.

யூபிலி ஆண்டில் வரும் திருப்பயணிகளுக்கு, குறிப்பாக, Conciliazione சாலையிலும்,   வத்திக்கான் வளாகத்திலும் திருப்பயணிகளுக்கு உதவுவதற்கு ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய நூறு தன்னார்வலர்கள் பணியில் இருப்பார்கள்.  

டிசம்பர் 8ம் தேதி காலை 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நடைபெறும் திருவழிபாட்டில் புனிதக் கதவைத் திறக்கும் நிகழ்வு மிகவும் எளிமையாக இருக்கும், ஆனால் அந்நிகழ்வு, 2ம் வத்திக்கான் பொதுச் சங்கம் நிறைவுற்றதன்  50ம் ஆண்டை நினைவுகூரும் சிறந்த அடையாளமாக நடைபெறும் என்றும், Dei Verbum, Lumen gentium, Sacrosanctum concilium, Gaudium et spes, Unitatis redintegratio, Dignitatis Humanae தொகுப்புகளிலிருந்து கருத்துரைகள் வாசிக்கப்படும் என்றும், இப்புனித ஆண்டுக்கென தயாரிக்கப்பட்ட நற்செய்தி, அப்பொதுச்சங்கத்தின்போது பயன்படுத்தப்பட்ட பீடத்தில் வைக்கப்படும், புனிதக் கதவு திறக்கப்படுமாறு திருத்தந்தை விண்ணப்பிக்க, அது திறக்கப்படும், பின்னர் அக்கதவு வழியாக திருத்தந்தை, கர்தினால்கள், ஆயர்கள், துறவியர், பொதுநிலையினர் பிரதிநிதிகள் செல்வார்கள், பின்னர் பசிலிக்காவில் திருப்பலி நடைபெறும் என்றும், டிசம்பர் 8ம் தேதி மாலையில் இரக்கத்தை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் பசிலிக்காவின் மேல்கோபுரத்தில் காட்டப்படும் என்றும், உரோம் லாத்தரன் பசிலிக்காவில் டிசம்பர் 13 ஞாயிறு காலை 9.30 மணிக்கு, திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றி புனிதக் கதவைத் திறந்து வைப்பார் என்றும் பேராயர் தெரிவித்தார். 2015ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி ஆரம்பிக்கும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.