2015-12-04 15:45:00

“பெண்களும் வேலையும்” கருத்தரங்கிற்கு திருத்தந்தை வாழ்த்து


டிச.04,2015. குடும்பத்திலும், குழந்தைகளை உருவாக்குவதிலும் பெண்கள் கொண்டிருக்கும் தவிர்க்க இயலாத பங்கை உறுதி செய்வதற்கு, உரோம் மாநகரில் நடைபெற்றுவரும் பன்னாட்டு கருத்தரங்கு உதவும் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பொருளாதார அமைப்புகளையும், மனித சமுதாயத்திற்கு ஏற்ற அரசியலையும் கட்டியெழுப்புவதில் பெண் உழைப்பாளர்களின் முக்கிய பங்கை இக்கருத்தரங்கு  உறுதி செய்யும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

“பெண்களும் வேலையும்” என்ற தலைப்பில் திருப்பீட பொதுநிலையினர் அவை, இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ள இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்குக்கு,  திருத்தந்தையின் சிந்தனைகள் கொண்ட தந்திச் செய்தியை, திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.

இச்சனிக்கிழமையன்று நிறைவடையும் இக்கருத்தரங்கு, குடும்பத்திலும், தொழில்புரியும் இடங்களிலும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குப் பதில் சொல்வதற்கு உதவும் வழிகள் குறித்து ஆராய்ந்து வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.