2015-12-04 15:33:00

மின்டனாவோவில் நீடித்த அமைதிக்கு திருத்தந்தை வேண்டுகோள்


டிச.04,2015. பிலிப்பைன்ஸின் Mindanao பகுதியில் நிலையான மற்றும் நீடித்த அமைதி நிலவுவதற்கு, அதனோடு தொடர்புடைய அனைத்து தரப்பினரும் தங்களை அர்ப்பணிப்பார்கள் என்று நம்பிக்கையைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிலிப்பைன்ஸ் அரசுத்தலைவர் Benigno S. Aquino அவர்களை, இவ்வெள்ளி காலையில் திருப்பீடத்தில் ஏறக்குறைய 25 நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் பல்வேறு குழுக்கள் மத்தியில் உரையாடல் இடம்பெற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இச்சந்திப்பிற்குப் பின்னர், அரசுத்தலைவர் Aquino அவர்களும், அவரோடு சென்றிருந்த இருபது பேர் கொண்ட பிரதிநிதி குழுவும், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட வெளியுறவுத் துறையின் நேரடிச் செயலர் பேரருள்திரு Antoine Camilleri ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசினர்.

பாரிஸ் மாநகரில் நடைபெறும் COP21 காலநிலை மாற்றம் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பும் வழியில் வத்திக்கானுக்கு வருகை தந்தார் பிலிப்பைன்ஸ் அரசுத்தலைவர் Aquino.

COP21 மாநாடு பற்றியும், பிலிப்பைன்சிலும், உலகின் பிற பகுதிகளிலும் காணப்படும் காலநிலை மாற்றம் பற்றியும் இச்சந்திப்புகளில் தகவல் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

மேலும், அமைதிக்காகப் பணியாற்றுங்கள் என்று சொல்லி, அமைதியைக் குறிக்கும் ஒலிவ இலை வரையப்பட்ட ஒரு பதக்கத்தையும் அரசுத்தலைவர் Aquino அவர்களுக்குப் பரிசாக அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், இச்சந்திப்பின் இறுதியில் அவர்கள் விடைபெற்றபோது, விமானப் பயணத்தில் வாசிப்பதற்குப் போதுமான நேரம் இருக்கும் என்றும் சொல்லி, Evangelii gaudium நற்செய்தியின் மகிழ்வு திருமடல், Laudato si' சுற்றுச்சூழல் திருமடல் ஆகிய இரண்டையும் பிலிப்பைன்ஸ் அரசுத்தலைவர் Aquino அவர்களுக்குப் பரிசாக அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.