2015-12-04 16:02:00

சென்னையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு காரித்தாஸ் உதவிகள்


டிச.04,2015. கன மழையால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டு, தீவாகத் தனித்து விடப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு உடனடி அத்தியாவசிய உதவிகளை ஆற்றி வருகிறது இந்திய கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.

சென்னை மாநகரம், மழை காலத்தின் இரு மாதங்களில் பெறும் மொத்த மழையையும் இரு நாள்களில் பெய்த தொடர் கன மழையினால் பெற்றதால், சென்னை மாநகரின் 65 இலட்சம் மக்களில் பெரும்பான்மையான மக்கள் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து தொடர்பின்றி விடப்பட்டுள்ளனர்.

ஆலயங்கள், மசூதிகள், பெரிய அங்காடிகள் மற்றும் திரையரங்குகள், கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென புகலிடங்களை வழங்கியுள்ளன.

சென்னை மாநகர் முழுவதும் தண்ணீரில் மிதக்கும்வேளை, சென்னை மயிலாப்பூர் மற்றும் பாண்டிச்சேரி கடலூர் உயர் மறைமாவட்டங்களுடன் இணைந்து இந்திய காரித்தாஸ் அமைப்பு மக்களுக்குத் தேவையான உணவு, உடை மற்றும் பிற உடனடி அத்தியாவசிய உதவிகளை வழங்கி வருகின்றது.

பள்ளிகள் மற்றும் அரசு நிர்வகிக்கும் பிற முகாம்களில் ஏறக்குறைய நான்காயிரம்  குடுபம்பங்களுக்கு இந்திய காரித்தாஸ் உதவி வருகிறது என்று அதன் தமிழக ஒருங்கிணைப்பாளர் ஜான் ஆரோக்ய ராஜ் அவர்கள் தெரிவித்தார்.

350 வருட வரலாற்றைக் கொண்டுள்ள சென்னை மாநகர் போன்றுள்ள எந்த ஒரு நகரமும் இத்தகைய கன மழைக்குத் தயாராக இருக்க முடியாது என்று ஊடகங்கள் கூறுகின்றன.

இதற்கிடையே, கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, சற்று இயல்பு நிலை திரும்பிய சென்னையில் மீண்டும் காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கி உள்ளது.

சென்னையில் அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், மயிலாப்பூர், ராயப்பேட்டை மற்றும் தாம்பரம், பிற புறநகர் பகுதிகளில் மழை பெய்கிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.