2015-12-04 14:27:00

கடுகு சிறுத்தாலும்: வெள்ளத்தால் பாதிப்படைந்தோருக்கு உதவுவோம்


ஒரு சமயம் பருவ மழைக் காரணமாக டெல்லி மாநகரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. விவசாயப் பயிர்களெல்லாம் நாசமாயின. விவசாய மக்களுக்கு பண உதவி செய்ய விரும்பி, வசதி படைத்தவர்களிடமெல்லாம் நிதி திரட்ட முடிவு செய்தார் பீர்பால். அதன்படி தன் நண்பர்களுடன் உண்டியல் ஏந்தி தெரு தெருவாக வந்தார். பீர்பாலின் நல்லெண்ணத்தைப் புரிந்து கொண்ட பொது மக்களும், பணக்காரர்களும் தாராளமாக நிதி உதவி செய்தனர். அந்த ஊரில் இருந்த பெரிய பணக்காரர் ஒருவர், பணம் படைத்தவராக இருந்தாரே தவிர, மகாக் கருமி. பீர்பால் உண்டியலுடன் நிதி கேட்க வருவதைக் கண்ட அந்த பணக்காரக் கருமி, முகத்தை சோகத்துடன் வைத்துக் கொண்டு, ‘வாருங்கள் அய்யா, நானும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவன்தான். என்னுடைய விவசாய நிலத்தில் வெள்ளம் புகுந்து பயிர்களையெல்லாம் நாசம் செய்து விட்டது. ஆகையினால் நான் மற்றவர்களுக்கு நிதி உதவி செய்யும் நிலையில் இல்லாது கஷ்டப்படுகிறேன்’ என்றார். பணக்காரர் நாடகமாடுகிறார் என்பதை புரிந்து கொண்ட பீர்பால், ‘நீங்கள் கஷ்டப்படுவதைப் பார்த்தால் முதலில் எங்கள் உதவி உங்களுக்குத்தான் தேவைப்படும். ஆகையினால் உங்களுக்குத் தேவையான பணத்தை நாங்கள் வசூலித்த இந்த உண்டியலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு ஏழையாகிவிட்ட உங்களுக்கு உதவி செய்யாவிட்டால் நாங்கள் மனிதர்களே அல்ல’, என்று கூறி உண்டியலை நீட்டினார். ‘என்னை மன்னித்து விடுங்கள். கஷ்டத்திற்கு உதவாத கஞ்சனாக இருப்பதை எண்ணி வெட்கப்படுகிறேன். நீங்கள் சேகரித்துள்ள நிதியைக் காட்டிலும் நான் பெரும் நிதியை அளிக்கிறேன், ஏற்றுக் கொள்ளுங்கள்’, என்று கூறி, பெரும் பணத்தையும், நகைகளையும் பீர்பாலிடம் அளித்தார் அந்த பணக்காரர்.

ஒரு பணக்காரக் கருமியை, தன் அறிவாற்றலால் மாற்றி, பெரும் நிதியைப் பெற்ற பீர்பாலை, கூட வந்த நண்பர்கள் மனதார பாராட்டி புகழ்ந்தனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.