2015-12-04 15:39:00

கடவுள் பேசுகின்ற ஒரு புத்தகமாக விவிலியத்தை வாசிக்க வேண்டும்


டிச.04,2015. திருவிவிலியத்தை, தலைசிறந்த ஓர் இலக்கிய படைப்பாக நோக்காமல், கடவுள் பேசுகின்ற ஒரு புத்தகமாக நோக்கி அதனை வாசிக்க வேண்டும் என்று இளையோரைக் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 

இளையோர்க்கென ஜெர்மன் மொழியில் கடந்த அக்டோபரில் பிரசுரமான திருவிவிலியத்தின் புதிய பதிப்பிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய அணிந்துரைப் பகுதியின் இத்தாலிய மொழி பெயர்ப்பு, Civiltà Cattolica என்ற இயேசு சபை மாத இதழில் இவ்வாரத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

உண்மையான இறைமைச் செய்தியைக் கொண்ட திருவிவிலியத்தில் கடவுள் பேசுகிறார் என்ற உணர்வில் வாசிக்க வேண்டும், இது, புத்தக அலமாரியில் வைக்கப்பட வேண்டிய புத்தகமாக எழுதப்படவில்லை என்று இளையோரிடம் கூறியுள்ளார் திருத்தந்தை.

தொடக்க காலத் திருஅவையில் துன்புறுத்தப்பட்டதைவிட, இக்காலத்தில் இன்னும் அதிகமாக கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும், விவிலியம் சில நாடுகளில் ஆபத்தான புத்தமாக உள்ளது, அந்நாடுகளில் விவிலியத்தை வைத்திருப்பவர்கள், தங்கள் அறைகளில் ஏதோ வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருப்பவர் போன்று நடத்தப்படுகின்றனர் என்றும் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இளையோரே, நீங்கள் எனது விவலியத்தைப் பார்த்தீர்களானால் அது உங்கள் கவனத்தை ஈர்க்காது, இதுவா திருத்தந்தையின் விவிலியம் என்றுகூட நீங்கள் கேட்கலாம், அவ்வளவு பழையதாக, கிழிந்த புத்தகமாகத் தெரியும், ஆயிரம் யூரோக்கள் விலையுடைய ஒரு புதிய விவிலியத்தை எனக்கு வாங்கிக் கொடுப்பதற்கு சோதிக்கப்படலாம், ஆனால் நான் புதிய விவிலியத்தை ஏற்க மாட்டேன், நான் எனது விவிலியத்தை அன்பு கூர்கிறேன், இது எனது மகிழ்வு மற்றும் கண்ணீரால் நனைந்துள்ளது, இது எனது விலைமதிப்பற்ற சொத்து என்றும் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மகாத்மாக காந்தி அவர்கள் விவிலியம் பற்றிச் சொன்னபோது, அனைத்துக் கலாச்சாரங்களையும் தூள் தூளாகத் தகர்ப்பதற்குப் போதுமான வெடிமருந்தைக் கொண்டிருக்கின்ற, இந்த உலகைத் தலைகீழாக மாற்றவும், போரினால் கிழிக்கப்பட்ட இப்புவிக்கு அமைதியைக் கொண்டுவரவும் தேவையான அனைத்தையும் கொண்டிருக்கும் ஓர் ஏட்டை, கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஓர் இலக்கியம் போன்று  நோக்குகின்றீர்கள் என்று கூறியதைக் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கத்தோலிக்கத் திருஅவைக்கு இளையோர் திருவிவிலியம் என்ற தலைப்பில் ஜெர்மன் மொழியில் வெளியாகியுள்ள புதிய பதிப்பில் திருத்தந்தை எழுதியுள்ள அணிந்துரை பிற மொழிகளில் 2016ம் ஆண்டில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.