2015-12-03 15:22:00

புனிதக் கதவுகளைத் திறக்கும் திருநிகழ்வு, நேரடி ஒளிபரப்பு


டிச.03,2015. டிசம்பர் 8, வருகிற செவ்வாய், அமல அன்னையின் திருநாளன்று, கத்தோலிக்கத் திருஅவையில் இரக்கத்தின் யூபிலியைத் துவக்கும் வண்ணம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் புனிதக் கதவுகளைத் திறக்கும் திருநிகழ்வு, உலகெங்கும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று, வத்திக்கான் ஊடகத்துறையின் தலைவர், அருள்பணி தாரியோ எதுவார்தோ விகனோ (Dario Edoardo Viganò) அவர்கள் அறிவித்தார்.

துவங்கவிருக்கும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் முதல் நிகழ்வைக் குறித்து, செய்தியாளர்கள் கூட்டத்தில் இப்புதனன்று பேசிய அருள்பணி விகனோ அவர்கள், இந்த முயற்சியில், வத்திக்கான் வானொலி நிலையம், வத்திக்கான் தொலைக் காட்சி நிலையம், மற்றும் 'சோனி' நிறுவனத்தின் தொழில்நுட்பம் ஆகியவை இணைகின்றன என்று எடுத்துரைத்தார்.

புனித பேதுரு பசிலிக்காப் பேராலய முகப்பில் அமைந்துள்ள புனிதக் கதவின் வெளியிலும், உட்புறமும் அமைக்கப்படும் 19 காமிராக்களின் உதவியுடன், இந்த முக்கிய நிகழ்வு, உலகத் தரம் வாய்ந்த முன்னணி காணொளி தொழில் நுட்பத்துடன் உலகெங்கும் நேரடியாக ஒளிபரப்பாகும் என்று அருள்பணி விகனோ அவர்கள் விளக்கிக் கூறினார்.

முன்னணித் தொழில் நுட்பங்களுடன் பதிவு செய்யப்படும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு, வரும் தலைமுறையினரின் வரலாற்று ஆய்வுகளுக்குப் பயன்படும் என்பதைக் கருத்தில் கொண்டு இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றும், வத்திக்கான் ஊடகத்துறையின் தலைவரான அருள்பணி விகனோ அவர்கள், செய்தியாளர்களிடம் விளக்கினார்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.