2015-12-03 15:46:00

ஈராக் - எர்பில் நகரில், கத்தோலிக்கப் பல்கலைக் கழகம் திறப்பு


டிச.03,2015. ஈராக் நாட்டின் குர்திஸ்தான் பகுதியின் தலைநகர் என்று கருதப்படும் எர்பில் நகரில், கத்தோலிக்கப் பல்கலைக் கழகம் ஒன்று, டிசம்பர் 8, வருகிற செவ்வாயன்று திறக்கப்படும் என்று ­ஃபிதேஸ் (Fides) செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

எர்பில் கத்தோலிக்கக் கல்தேய வழிபாட்டு முறை உயர் மறைமாவட்டம் 2012ம் ஆண்டு முதல் உருவாக்கிவந்த இந்த பல்கலைக் கழகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்க, பேராயர் பாஷார் வார்தா (Bashar Warda) அவர்கள் அனைத்து மதத் தலைவர்களுக்கும் சிறப்பு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

எர்பில் புறநகர் பகுதியில் அன்காவா (Ankawa) எனுமிடத்தில், 30,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பல்கலைக் கழகம், 2012ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி கட்டுமானப் பணிகளைத் துவங்கியது.

IS இஸ்லாமிய அரசின் வன்முறைகளுக்குப் பயந்து, நினிவே பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறி, அன்காவா பகுதியில் அடைக்கலம் புகுந்துள்ள கிறிஸ்தவர்களுக்கு இப்பல்கலைக் கழகம் ஒரு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்று பேராயர் வார்தா அவர்கள் ­ஃபிதேஸ் செய்தியிடம் கூறினார்.

ஈராக் நாட்டில் தொடரும்  வன்முறைகளையும் மீறி, கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் ஒற்றுமையுடன் வாழமுடியும் என்ற நம்பிக்கையை, வருங்காலத் தலைமுறையினருக்கு வழங்க, எர்பில் கத்தோலிக்கப் பல்கலைக் கழகம் உதவும் என்று பேராயர் வார்தா அவர்கள் கூறினார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.