2015-12-03 15:38:00

அயல்நாடுகளில் உழைக்கும் இந்தியர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு


டிச.03,2015. அயல் நாடுகளில் வேலை செய்யச் செல்லும் இந்தியர்களின் பாதுகாப்பை, இந்திய அரசு இன்னும் சக்திவாய்ந்த வகையில் உறுதி செய்யவேண்டும் என்று இந்திய ஆயர் பேரவை அரசிடம் விண்ணப்பித்துள்ளது.

சவூதி அரேபியாவில் பணியாற்றக் சென்ற கஸ்தூரி முனிரத்தினம் என்ற ஒரு பெண்ணின் கையை, அவரைப் பணிக்கு அமர்த்தியவர்கள் வெட்டினர் என்ற செய்தியை அடுத்து, இந்தியாவில் எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசருடன் இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார் என்று ஆசிய செய்திக் குறிப்பு கூறுகிறது.

இக்கொடுமைக்குப் பின்னர், இந்திய ஆயர் பேரவையின் தொழில் நல பணிக்குழுவின் தலைவர், ஆயர் ஆஸ்வால்ட் லூயிஸ் அவர்கள் விடுத்துள்ள ஓர் அறிக்கையில், அயல்நாடுகளில் உழைக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் கூடுதல் பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அயல்நாடுகளில் பணிபுரியச் செல்வோரில் பெரும்பான்மையானவர்கள் வறுமையின் காரணமாகவே அங்கு செல்கின்றனர் என்றும், அவர்களில் அதிகம் பேர், தாங்கள் செய்யம் தொழிலில் தேர்ச்சி பெற்றவர்கள் எனினும் அவர்களின் திறமைக்கும் உழைப்பிற்கும் தகுந்த ஊதியம் மறுக்கப்படுகின்றனர் என்றும் ஆயர் லூயிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.