2015-12-03 15:38:00

அமைதி வேண்டி ஒலிக்கும் பெத்லகேம் ஆலயமணிகள்


டிச.03,2015. உலகில் பெருகிவரும் வன்முறைகளைத் தீர்க்கவும், அமைதியை நிலைநாட்டவும், டிசம்பர் 5, இச்சனிக்கிழமையன்று, பெத்லகேமில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் மாலை 7.30 மணிக்கு, ஆலயமணிகள் ஒலிக்கும் என்று புனித பூமி பராமரிப்புக் குழு அறிவித்துள்ளது.

அமைதியின் இளவரசராம் இயேசு, பெத்லகேம் நகரில் பிறந்ததால், அந்நகரம் கிறிஸ்தவத்தின் இதயமாக மாறியது என்றும், இயேசு கொணர்ந்த அமைதியை மக்கள் தங்கள் இதயங்களில் உணர, இந்த மணியோசை எழுப்பப்படும் வேளையில், உலகில் உள்ள அனைத்து கோவில்களும் இந்த முயற்சியில் இணையலாம் என்றும் இக்குழுவைச் சார்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

பல நூற்றாண்டுகளாகக் கடைபிடிக்கப்படும் ஒரு மரபின்படி, புனித பூமியின் காவலர், அருள்பணி பியர்பத்திஸ்தா பிஸ்ஸபால்லா (Pierbattista Pizzaballa) அவர்கள், திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று, இயேசு பிறப்பு பசிலிக்காவில் திருவருகைக்கால வழிபாடுகளைத் துவக்கி வைத்தார் என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

உலகெங்கிலும், குறிப்பாக, புனித பூமியில் தொடர்ந்துவரும் வன்முறைகளின் தாக்கத்தால், புனித பூமி கொண்டாட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்று ஆசிய செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.