2015-12-03 15:25:00

அடிமைத்தனம் ஒழிக்கும் உலக நாளையொட்டி ஐ.நா. செய்தி


டிச.03,2015. வீடுகளிலும், வயல்களிலும், தொழிற்சாலைகளிலும் உழைக்கும் குழந்தைகள், கடன்களைத் தீர்க்கமுடியாமல் உழைக்கும் கொத்தடிமைகள், பாலியல் வர்த்தகத்தில் விற்கப்படுவோர் ஆகியோரின் வடிவங்களில் அடிமைத்தனம் இன்றும் இவ்வுலகில் உள்ளது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறியுள்ளார்.

டிசம்பர் 2, இப்புதனன்று கடைபிடிக்கப்பட்ட அடிமைத்தனம் ஒழிக்கும் உலக நாளையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன் அவர்கள், நவீன அடிமைத்தனத்தின் பல வடிவங்களையும் அழிக்க உலக அரசுகள் துணிவு கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

முன்பு எப்போதும் இல்லாத அளவு மக்கள் தங்கள் குடியிருப்புக்களை விட்டுத் துரத்தப்படும் இன்றைய காலக் கட்டத்தில், இந்த அடிமைத் தனம் இன்னும் பல வடிவங்களை எடுக்கும் ஆபத்து பெருகியுள்ளது என்று பான் கி மூன் அவர்கள் கவலையை வெளியிட்டுள்ளார்.

உலகெங்கும் 2 கோடியே, 10 இலட்சம் மக்கள், நவீன அடிமைத் தனத்தில் சிக்கியுள்ளனர் என்று கூறிய பன்னாட்டு தொழில் நிறுவனமான ILO வின் இயக்குனர், Guy Ryder அவர்கள், நவீன அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளோரின் தொழிலை, சட்டத்திற்குப் புறம்பாக உறுஞ்சும் நிறுவனங்கள், 150 பில்லியன் டாலர்கள், அதாவது, 15,000 கோடி டாலர்கள் இலாபத்தைக் குவிக்கின்றனர் என்று கூறினார்.

இந்த நிலை கண்டு, கோபம் கொள்வது மட்டும் பயனில்லை என்றும், இதை மாற்றும் முயற்சிகளில் அனைவரும் ஈடுபடவேண்டும் என்று ILO வின் இயக்குனர், Guy Ryder அவர்கள் கேட்டுக்கொண்டார். 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.