2015-12-02 15:08:00

அசிசி நகர் கிறிஸ்மஸ் குடிலில் விளக்கேற்றும் திருத்தந்தை


டிச.02,2015. டிசம்பர் 6, வருகிற ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானில் இருந்தபடியே, இத்தாலியின் அசிசி நகரில் உருவாக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் குடில் மற்றும் கிறிஸ்மஸ் மரம் இவற்றின் விளக்குகளை ஏற்றி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அசிசி நகர் பசிலிக்காவின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் அலங்காரங்கள், புலம் பெயர்ந்தோரை மையப்படுத்தி அமைந்துள்ளதால், அங்குள்ள கிறிஸ்மஸ் குடில், லாம்பதுசா தீவை வந்தடைந்த ஒரு படகைப் போல் உருவாக்கப்பட்டுள்ளது என்று, அசிசி திருத்தலத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

டிசம்பர் 6, ஞாயிறு மாலை அங்கு நடைபெறும் திருப்பலியை, பாப்பிறை இல்லப் பொறுப்பாளர், பேராயர் Georg Gänswein அவர்கள் தலைமையேற்று நடத்துவார் என்றும், திருப்பலிக்குப் பின்னர், மாலை 6.30 மணியளவில், கிறிஸ்மஸ் அலங்கார விளக்குகளை திருத்தந்தை ஏற்றிவைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், காமரூன், நைஜீரியா, சிரியா ஆகிய நாடுகளிலிருந்து இத்தாலியில் அடைக்கலம் புகுந்துள்ள 31 புலம் பெயர்ந்தோர், இந்த விளக்கேற்றும் விழாவில் கலந்துகொள்வர் என்றும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, கிறிஸ்மஸ் பொம்மைகளை வழங்க, இத்தாலிய இரயில் துறை முன்வந்துள்ளது என்றும் அசிசி திருத்தலத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.